இன்னும் நான்கு மாதங்களில் ஏற்படவுள்ள மாற்றம் : மீண்டும் ஒரு நெருக்கடி நிலை தொடர்பில் ரணிலின் எச்சரிக்கை
எதிர்வரும் ஜூன் மாதத்திற்குப் பிறகு நாம் மேலும் முன்னேற வாய்ப்புகள் உள்ளன என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதால் மட்டும் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடாது. ஏனெனில் இன்று நாம் இறக்குமதி சார்ந்த பொருளாதாரமாக மாறியுள்ளோம்.
மீண்டும் பொருளாதார நெருக்கடியை சந்திக்கலாம்
நம் நாட்டில் இறக்குமதியை விட ஏற்றுமதி குறைவாக உள்ளது. இந்த இடைவெளியைக் குறைக்க வெளிநாடுகளிடம் கடன்களைப் பெறுகிறோம். இந்த நிலை தொடர்ந்தால் இன்னும் 10 வருடங்களில் மீண்டும் பொருளாதார நெருக்கடியை சந்திக்க வேண்டியுள்ளது.
எனவே இந்நிலைமையைத் தவிர்க்க உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, சர்வதேச நாணய நிதியம் என்பனவற்றுடன் கலந்துரையாடி நாட்டை ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு கொண்டு செல்லும் வேலைத்திட்டத்தை விரைவில் ஆரம்பிப்போம்.
அதன் ஆரம்ப நடவடிக்கையாக விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுடன் அது வெற்றியடைய இன்னும் 06, 07 வருடங்கள் செல்லும்.
நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை உருவாக்கி ஏற்றுமதி பொருளாதாரமாக மாற்றும் நடவடிக்கையை சட்டத்தின் ஊடாகவும் மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கான சட்டத்தை எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், அரசாங்கத்தின் நிதிக் கட்டுப்பாட்டிற்காக புதிய சட்டம் கொண்டு வரப்படவுள்ளதுடன், இந்தப் புதிய சட்டங்களின் ஊடாக பொருளாதார நடவடிக்கைகளைத் தொடர முடியும்.
கடந்த பொருளாதார நெருக்கடியினால் நாட்டின் அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டனர். அப்படியானால், வளர்ந்து வரும் பொருளாதாரத்தின் பலன்கள் ஒரு சிலருக்கு மட்டுமல்ல, அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.