ஒரே நாளில் உக்ரைனை இருளாக்கிய ரஷ்யா!
ரஷ்யா மீண்டும் மிகப்பெரிய தாக்குதல் ஒன்றை முன்னெடுத்து உக்ரைனின் பெரும்பகுதியை இருளில் மூழ்கடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனுக்கு எதிராக போர் தொடங்கியதில் இருந்து பின்னர், இதுவரை ரஷ்யா முன்னெடுத்த தாக்குதல்களில் இந்தத் தாக்குதலே மிகப்பெரியதாக கருதப்படுகிறது.
இந்த தாக்குதலில் சுமார் 90 ஏவுகணைகள் மற்றும் 60 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரஷ்யாவின் இலக்கு
உக்ரைனிலுள்ள டினிப்ரோ (Dnipro) மின் உற்பத்தி நிலையத்தை குறிவைத்தே இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனால் உக்ரைனில் பல்வேறு பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் அதிபர் ஜெல்ன்ஸ்கி தெரிவிக்கையில், ஈரானினால் தயாரிக்கப்பட்ட ட்ரோன்களை ரஷ்யா பயன்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார், தவிரவும், ரஷ்ய இராணுவத்தினரின் இலக்கு எது என்பதை உலகம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறது எனவும் அவர் கூறியிருந்தார்.
மின் உற்பத்தி நிலையங்கள், மின்சார விநியோகக் கம்பிகள், நீர்மின் அணை, சாதாரண குடியிருப்பு கட்டிடங்கள் என தாக்குதல் நடத்தப்பட்ட இலக்குகளை அவர் பட்டியலிட்டுள்ளார்.
மிகப்பெரிய நீர்மின் நிலையம்
மேலும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் தொடர்பான தகவல்கள் எதனையும் இதுவரை வெளியிடாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், டினிப்ரோ (Dnipro) மின் உற்பத்தி நிலையமே உக்ரைனின் மிகப்பெரிய நீர்மின் நிலையமாகும். அது தற்போது தாக்குதலுக்குட்படுத்தப்பட்டுள்ளதன் மூலமாக ரஷ்யா உக்ரைன் மீதான தாக்குதலை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளதனை பகிரங்கப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.