டொலர் பெறுமதி குறைவடைய என்ன காரணம்?
டொலரின் பெறுமதி தொடர்ச்சியாக குறைவடைந்து ரூபாவின் பெறுமதி தொடர்ந்து அதிகரித்து வருவதை காண முடிகிறது. 2022ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது டொலரின் பெறுமதி பாரிய அளவில் எகிறியது. 2022ஆம் ஆண்டு 200 ரூபா என்றவகையில் காணப்பட்ட டொலரின் பெறுமதி செயற்கைத்தனமாக கட்டுப்படுத்தப்பட்டு கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் அதனை தளர்த்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. அவ்வாறு தளர்த்தப்பட்டதன் பின்னர் டொலரின் பெறுமதி கிட்டத்தட்ட 400 ரூபா வரை சென்றது. எனினும் இலங்கை மேற்கொண்டு வருகின்ற பல்வேறு மறுசீரமைப்பு வேலைத்திட்டங்கள், சர்வதேச நாணய நிதியத்துடனான விரிவாக்கப்பட்ட நிதிவசதி உடன்படிக்கை, கடன் மறுசீரமைப்பு செயல்பாடுகள் போன்றவற்றின் காரணமாக இன்று டொலரின் பெறுமதி குறைவடைந்து ரூபாவின் மீண்டும் அதிகரித்து செல்வதை காண முடிகிறது.
சாதக நிலை
இரண்டு வருடங்களுக்கு முன்னர் 400 ரூபாவாக காணப்பட்ட டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்று 300 ரூபா வரை உயர்வடைந்துள்ளது. பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீண்டு வந்து கொண்டிருக்கின்ற சூழலில் இவ்வாறு டொலரின் பெறுமதி வீழ்ச்சி அடைந்து வருகின்றமையும் ரூபாவின் பெறுமதி அதிகரித்து வருகின்றமையும் மிக முக்கியமான ஒரு நிலைமையாக காணப்படுகிறது.
டொலரின் பெறுமதி குறைவடைய என்ன காரணம்?
அதாவது கடந்த மூன்று வருடங்களாக முற்றாக செயல் இழந்திருந்த சுற்றுலாத்துறை ஊடான வருமானம் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. 2022இல் ஒரு பில்லியன் டொலர்கள், 2023 இல் 2 பில்லியன் டொலர்கள் என வருமானம் அதிகரித்துள்ளது. 2024 இலும் சுற்றுலாத்துறை வருமானம் அதிகரித்து செல்கின்றது. வெளிநாடுகளில் பணிபுரிகின்ற இலங்கையர்கள் அனுப்பும் டொலர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. மேலும் தற்காலிகமாக கடன் மீள் செலுத்தலும் இடைநிறுத்தப்பட்டுள்ளது. சர்வதேச வங்கிகளின் கடன்களும் கிடைக்க ஆரம்பித்துள்ளன. இதனால் டொலர் உள்வருகை அதிகரிக்கிறது. எனவே டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிக்கிறது. அதாவது டொலரின் பெறுமதி டொலர் இலங்கைக்கும் கிடைக்கும் அளவிலும் அதற்கான கேள்வியிலும் தங்கியுள்ளது. தற்போது டொலர் அதிகளவு கிடைக்க ஆரம்பித்துள்ளதால் டொலரின் பெறுமதி குறைவடைந்து ரூபாவின் பெறுமதி அதிகரிக்கிறது. அதன் காரணமாகவே 400 ரூபா அளவுக்கு உயர்வடைந்த டொலரின் பெறுமதி தற்போது 300 ரூபா அளவுக்கு குறைவடைந்துள்ளது.
நெருக்கடிக்கு பிரதான காரணம்
இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வரும் செயற்பாட்டில் இது ஒரு சாதகமான நிலைப்பாட்டை வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறது. 2022 ஆம் ஆண்டு நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கும் மக்கள் அத்தியாவசிய பொருட்களுக்கு நாட்கணக்கில், கிலோமீட்டர் கணக்கில் வரிசைகளில் நிற்பதற்கும் என்ன காரணம் என்பது சகலருக்கும் தெரியும்.
அதாவது பொருளாதார நெருக்கடி 2022 ஆம் ஆண்டில் ஏற்படுவதற்கான பின்னணி காரணங்கள், உடனடி காரணங்கள், நீண்ட கால காரணங்கள் தொடர்பாக பல்வேறு தரப்பினரும் தற்போது அலசி ஆராய்ந்து வருகின்றனர். அதாவது 2022 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணமாக டொலர் பற்றாக்குறையே அமைந்தது. அதாவது இலங்கைக்குள் வருகின்ற டொலர்கள் குறைந்தது. அதன் காரணமாகவே அந்த நெருக்கடி ஏற்பட்டது என்பது சகலருக்கும் தெரியும்.
டொலர் உள்வருகை, வெளி செல்தல்?
இலங்கையை பொறுத்தவரை இறக்குமதி செய்வதற்கு வருடந்தோறும் கிட்டத்தட்ட 20 முதல் 24 பில்லியன் டொலர்கள் தேவைப்படுகின்றன. ஆனால் இலங்கை செய்கின்ற ஏற்றுமதிகள் ஊடாக கிட்டத்தட்ட 10 முதல் 12 பில்லியன் டொலர்களே கிடைக்கின்றன. எனவே ஒவ்வொரு வருடமும் இலங்கைக்கு மறைபெறுமதியாக 10 பில்லியன் டொலர்கள் காணப்படுகின்றன. அதாவது டொலர் இடைவெளி 10 முதல் 12 பில்லியன் டொலர்களாக உள்ளன. அதேநேரம் வெளிநாடுகளில் பணிபுரிகின்ற இலங்கையர்கள் இலங்கைக்கு கிட்டத்தட்ட 6 தொடக்கம் 7 பில்லியன் டொலர்களை அனுப்புகின்றனர். சுற்றுலாத்துறை ஊடாக கிட்டத்தட்ட 4 பில்லியன் டொலர்கள் கிடைக்கின்றன. அதேபோன்று வெளிநாட்டு உதவிகள் கடன்கள் மூலமும் டொலர்கள் உள்வருகின்றன. அதேநேரம் இலங்கை வருடந்தோறும் 5 முதல் 6 பில்லியன் டொலர்கள் வரை வெளிநாட்டு கடன்களை செலுத்தவேண்டும். (தற்போது வெளிநாட்டு கடன் செலுத்தல் இடைநிறுத்தப்பட்டுள்ளது)
2020 பின்னர் என்ன நடந்தது?
எப்படியிருப்பினும் 2020 ஆம் ஆண்டு முதல் டொலர் வருகையின் பாதகமான நிலை ஏற்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சுற்றுலாத்துறை வருமானம் முற்றாக செயலிழந்து போனது. வெளிநாடுகளில் பணிபுரிகின்ற இலங்கையர்கள் அனுப்புகின்ற அந்நிய செலாவணியின் அளவு குறைவடைந்தது. 50 வீதமாக அந்நிய செலாவணி வருகை குறைவடைந்தது. இதன் காரணமாக இலங்கையின் டொலர் உள்வருகை கடுமையாக பாதிக்கப்பட்டது.
மேலும் 2020 ஆம் ஆண்டு இலங்கையின் அரச வருமானம் குறைவடைந்தமையினால் சர்வதேச கடன் தரப்படுத்தல் நிறுவனங்கள் இலங்கையின் பொருளாதாரக் குறிகாட்டிகளை பாதகமாக வெளிக்காட்டியமையினால் இலங்கையினால் சர்வதேச கடன்களையும் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
நெருக்கடி நிலை
இந்த பின்னணியிலேயே இலங்கையில் டொலர் பற்றாக்குறை 2022 ஆம் ஆண்டு ஏற்பட்டது. இதனால் டொலரின் பெறுமதி கிட்டத்தட்ட 400 ரூபாய் சென்றது. இதன் காரணமாக இலங்கையில் உற்பத்தி செலவுகள் அதிகரித்தன. இறக்குமதி பொருட்களின் விலைகள் அதிகரித்தன. மக்கள் பொருளாதார துன்பங்களை எதிர்கொண்டனர். வாழ்க்கைச் செலவு உயர்வடைந்தது. எரிபொருட்கள் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கு டொலர்களில் இருக்கவில்லை. வெளிநாட்டு கடன்களை செலுத்த முடியவில்லை. எப்போதும் வெளிநாட்டு கையிருப்பில் கிட்டத்தட்ட ஆறு பில்லியன் டொலர்கள் இருக்க வேண்டும். ஆனால் 2022 இல் 17 மில்லியன் டொலர்களே கையிருப்பில் இருந்தன. இதன் காரணமாகவே எரிபொருள் மற்றும் எரிவாயுவை கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு லிட்டர் எரிபொருளை பெறுவதற்கு எரிவாயுவை பெறுவதற்கும் மக்கள் நாட்கணக்கில் கிலோ மீட்டர் கணக்கில் வரிசையில் நிற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
பற்றாக்குறை
இவை அனைத்துக்கும் இந்த டொலர் பற்றாக்குறையே காரணமாக இருந்தது. அதாவது இந்த நெருக்கடி ஏற்படுவதற்கும் டொலர் பற்றாக்குறை ஏற்படுவதற்கும் பல காரணங்கள் இருந்தாலும் டொலரின் பெறுமதி உயர்வடைந்து ரூபாவின் பெறுமதி சரிந்தமைக்கு டொலர் பற்றாக்குறை மிக முக்கிய காரணமாக அமைந்தது. 2020 ஆம் ஆண்டியே நாணய நிதியத்தை நாடியிருந்தால் ஓரளவு 2022ஆம் ஆண்டு நெருக்கடியை தவிர்த்திருக்கலாம்.
நாணய நிதியத்துடனான உடன்படிக்கை
2022 ஏப்ரல் மாதமளவில் இலங்கை சர்வதேச நாணய நிதியத்தை நாடியது. பல சுற்று பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. தொடர்ந்து இலங்கை நாணய நிதியத்துடன் விரிவாக்கப்பட்ட நிதிவசதி திட்டத்திற்குள் சென்றது. அதன் பின்னர் இலங்கைக்கு 48 மாதங்களில் 2.9 பில்லியன் டொலர் கனை தவணையாக வழங்க நாணய நிதியம் முன்வந்தது. அதுமட்டுமின்றி நாடு வங்குரோத்து நிலையிலிருந்தும் வெளியே வந்து கொண்டிருக்கின்றது. இவற்றின் காரணமாக தற்போது உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்றன இலங்கைக்கு கடன்களை வழங்க முன்வந்திருக்கின்றன.
மறுசீரமைப்புக்கள்
இலங்கை சர்வதேச நாண நிதியத்தின் நிபந்தனைக்கு உட்பட்டு அரசாங்க வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்திருக்கின்றது. பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு முடிந்துள்ளதுடன் சர்வதேச கடன் மறுசீரமைப்பு தொடர்பில் பேச்சுக்கள் இடம்பெறுகின்றன. இவற்றின் விளைவாக டொலர் உள்வருகை அதிகரித்துள்ளது. நாண நிதியம் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஒருமுறை இலங்கையின் பொருளாதார மீளாய்வை செய்யும். அதன்படி நாணய நிதியத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் பீற்றர் ப்ரூவர் தலைமையிலான குழுவினர் இரண்டாவது மீளாய்வை முன்னெடுத்துவருகின்றனர்.
தற்போது என்ன நடக்கிறது?
மறுசீரமைப்புக்கள், நாணய நிதிய உடன்படிக்கை என்பனவற்றின் விளைவாக சுற்றுலாத்துறை தற்போது மீள் எழுந்து வருகிறது. சுற்றுலாத்துறை ஊடான டொலர் வருமானம் அதிகரித்திருக்கிறது. 2023 ஆம் ஆண்டில் 2 பில்லியன் டொலர்கள் கிடைத்துள்ளன. மேலும் வெளிநாடுகளில் பணிபுரிகின்ற இலங்கையர்களும் இலங்கைக்கு அந்நிய செல்லாவணியை அனுப்புவதை அதிகரித்திருக்கின்றனர். மீண்டும் கிட்டதட்ட 6 பில்லியன் டொலர் அளவில் அந்நிய செலாவணி வந்து கொண்டிருக்கின்றது. வாகனங்களுக்கு இறக்குமதி தடை தொடர்வதால் இறக்குமதிக்காக வெளிச்செல்லும் டொலர்களின் அளவும் குறைவடைந்துள்ளது.
இதன்காரணமாக தற்போது டொலர் பெறுமதி வீழ்ச்சி அடைந்து ரூபாவின் பெறுமதி அதிகரித்துவருகின்றது. எனவே உள்நாட்டில் உற்பத்தி செலவுகள் குறைவடையும். பொருளாதார வளர்ச்சியை நோக்கி பயணிக்க முடியும். அதாவது பொருளாதார மீட்சி செயற்பாடுகளில் இது முக்கியமானதாக காணப்படுகின்றது. தற்போது மீண்டும் டொலர்கள் உள்வர ஆரம்பித்துள்ளதால் பொருளாதாரம் சாதக நிலையை நோக்கி நகர்கிறது. ஆனால் ஏற்கனவே ஏற்பட்ட நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட மக்களை மீண்டும் பொருளாதார ரீதியாக வலுவூட்டுவதற்கான வேலைத்திட்டங்கள் அவசியமாக இருக்கின்றன.