மத்திய மாகாணத்தில் உதவி ஆசிரியர்களுக்கு நியமன கடிதங்கள் வழங்கிவைப்பு
மத்திய மாகாணத்தில் பல காலமாக இழுபறியில் இருந்த 136 உதவி ஆசிரியர்களுக்கான நியமன கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ராமேஷ்வரன் ஆகியோரின் வேண்டுக்கோளுக்கமைவாக, மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே தலைமையில் இதற்கான நியமன கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
நாட்டில் ஏற்பட்ட கொரோனா நோய் தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி நிலைமை ஆகியன காரணமாக இவர்களுக்கான நியமனங்களை வழங்குவதில் பல இழுபறி நிலைமைகள் மற்றும் அவர்களால் சமர்பிக்கப்பட்ட ஆவணங்களில் சில குளறுபடிகள் காரணமாகவும் நியமனம் வழங்குவதில் இந்த தாமதம் ஏற்பட்டது.
ஆசிரிய உதவியாளர் நியமனங்கள்
இதனையடுத்து, அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ராமேஷ்வரன் ஆகியோரின் நேரடி தலையீட்டின் காரணமாக 136 ஆசிரியர்களுக்கு நியமன கடிதங்கள் இன்றைய தினம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ராமேஷ்வரன்,
“மலையகத்தில் பெரும் தலைவரமான மறைந்த அமரர் ஆறுமுகன் தொண்டமான் இருந்த காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட ஆசிரிய உதவியாளர் நியமனங்கள் பல்வேறு சவால்களையும் தாண்டி அவர்கள் ஆசிரிய தேவைக்கு உள்வாங்கப்பட்டார்கள்.
இருப்பினும் இன்னும் 270 ஆசிரியர்களுடைய ஆவணங்கள் முறையாக இல்லாமல் இருப்பதன் காரணமாக அவர்களுடைய நியமனங்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
ஆளுநரின் நேரடி தலையீடு
எனவே, அவர்களின் ஆவணங்களை சரி செய்து விரைவில் அதற்கான நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆட்சி காலத்தில் பொறுப்பு வாய்ந்தத்துறை அமைச்சராக இருந்தும் இதற்கு நிரந்தர தீர்வு பெற்றுக்கொடுக்காமல் தற்போது பெயர் போடும் அரசியலில் சிலர் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இவ்வேளையில் அமைச்சர் ஜீவன் தொண்டமானும், நானும், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமியும் தொடர்ச்சியாக ஆளுநரிடம் கலந்துரையாடி அழுத்தங்களை கொடுத்ததன் காரணமாக, ஆளுநரின் நேரடி தலையீட்டில், மத்திய மாகாண பிரதம செயலாளர் மற்றும் மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளரின் இடைவிடாத உழைப்பின் காரணமாக இந்த நியமன கடிதங்கள் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு பங்களிப்பு வழங்கிய அரசியல் தலைமைகளுக்கும், அதிகாரிகளும் மற்றும் நல்லுள்ளங்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்வதுடன், இந்த ஆசிரிய சேவையை வெறும் தொழிலாக பார்க்காமல் எமது எதிர்கால தலைமுறையினரை வழுப்படுத்தும் ஒரு சேவையாக வழங்கி மாற்றத்தை ஏற்படுத்துமாறு கேட்டக்கொள்கின்றேன்.” என்றார்.