ரஷ்ய தாக்குதலில் இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை : வெளிவிவகார அமைச்சு தகவல்
ரஷ்யாவின் மொஸ்கோவில் உள்ள திரையரங்கில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இலங்கையர் எவரும் பாதிக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ரஸ்யாவில் மொஸ்கோவிலுள்ள திரையரங்கில் நேற்றைய தினம்(22) நடைபெற்ற இசை நிகழ்ச்சியொன்றில் சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டும் மற்றும் வெடிகுண்டுகள் வீசப்பட்டும் தாக்குதல்கள் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில் இடம்பெற்ற குறித்த தாக்குதலில் அங்கிருந்த இலங்கையர் ஒருவரும் பாதிக்கப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல்
மேலும் மொஸ்கோவில் இருந்து கிடைத்த தகவலின் படி இது உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அத்தோடு இந்தத் தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதல் வெறுக்கத்தக்க மற்றும் கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலாக கருதப்படுகிறது என்று ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது.
இரங்கல்
மேலும் இந்த சோகமான நேரத்தில் ரஷ்யாவுடன் தான் நிற்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அத்துடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் மற்றும் இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி ஆகியோர் உயிரிழந்தவர்களுக்கும் மற்றும் ரஷ்ய அரசுக்கும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலை கண்டித்து ஆப்கானிஸ்தான், கியூபா, ஜேர்மனி, ஜப்பான், அமெரிக்கா மற்றும் வெனிசுவேலா ஆகிய நாடுகளும் இரங்கல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.