காவலர்கள் மோசமாக நடத்தினர்: அரவிந்த் கேஜரிவால்
மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டபோது, மணீஷ் சிசோடியாவை மோசமாக நடத்திய அதே காவலர்கள் தன்னையும் மோசமாக நடத்தியதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
ரௌஸ் அவென்யூ நீதிமன்றத்தில், தில்லி முதல்வர் கேஜரிவால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், எனது பாதுகாப்புப் பணியிலிருந்து உதவி காவல்துறை ஆணையர் ஏ.கே. சிங்கை மாற்றுமாறு உத்தரவிடக் கோரிக்கை வைக்கப்பட்டது. நீதிமன்றத்துக்கு தன்னை அழைத்து வந்த போது, ஏகே சிங், தன்னை மோசமாக நடத்தியதாக ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜரிவால் கூறியிருக்கிறார்.
தில்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை மார்ச் 28ஆம் தேதி வரை காவலில்வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு தில்லி நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
மார்ச் 21ஆம் தேதி இரவு கைது செய்யப்பட்ட அரவிந்த் கேஜரிவாலை, அமலாக்கத் துறை தலைமையகத்துக்கு அழைத்துச் சென்று அவரிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து ரௌஸ் அவென்யூ நீதிமன்ற வளாகத்தில் பணப்பரிவர்த்தனை மோசடி வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி முன்பு நேற்று மாலை ஆஜர்படுத்தினர்.
அப்போது, தன்னை காவலர்கள் தவறாக நடத்தியதாகவும், இது முதல்முறை நடந்ததது அல்ல என்றும், ஏற்கனவே, துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவையும் கைது செய்தபோது, காவலர்கள் அவரை மோசமாக நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது என்பதும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தில்லி முதல்வரை தொடர்ந்து சிசிடிவி கண்காணிப்பின் கீழ்தான் விசாரணை நடத்த வேண்டும் என்றும், இது தொடர்பான புகார்கள் எழுந்தால் விசாரணை நடத்த வசதியாக அந்த சிசிடிவி பதிவுகள் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியிருக்கிறது.
மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில்தான், அரவிந்த் கேஜரிவாலை 6 நாள்கள் விசாரணைக் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது.