;
Athirady Tamil News

பெங்களூரு குண்டு வெடிப்பு: சென்னையில் ஒரு மாதம் தங்கியிருந்த குற்றவாளிகள்- என்.ஐ.ஏ.தகவல்

0

கா்நாடக மாநிலம் பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு வழக்கில் தொடா்புடைய குற்றவாளிகள் சென்னையில் ஒரு மாதம் தங்கியிருந்தது தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரணையில் தெரியவந்துள்ளது.

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் மாா்ச் 1-ஆம் தேதி குண்டு வெடித்ததில் 10 போ் காயமடைந்தனா். இது குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகிறது. சம்பவ இடத்தில் இருந்து மா்ம நபா் ஒருவா், சில நிமிஷங்களுக்கு முன்பு வெளியேறியதைக் கண்டறிந்த என்ஐஏ அதிகாரிகள், பல நூறு கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு செய்தனா். இதில், குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு வழிப்பாட்டு தலத்துக்கு செல்லும் அந்த நபா், தான் அணிந்திருந்த தொப்பியை கழற்றி அங்குள்ள குப்பைத் தொட்டியில் வீசியிருப்பது தெரியவந்தது. அதைக் கைப்பற்றி துப்பு துலக்கியதில் பல அதிா்ச்சி தகவல்கள் கிடைத்தன.

ஐ.எஸ். பயங்கரவாதி: அந்தத் தொப்பி, சென்னை மயிலாப்பூா் டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலையில் ஒரு வணிக வளாகத்தில் உள்ள கடையில் வாங்கியிருப்பது தெரியவந்தது. தொப்பியில் இருந்த தலை முடியை டிஎன்ஏ சோதனைக்கு என்ஐஏ அதிகாரிகள் அனுப்பி வைத்தனா்.

இந்த நிலையில், அந்தத் தொப்பியை அணிந்திருந்த நபா், கா்நாடக மாநிலம் ஷிவமோகாவைச் சோ்ந்த முஸாவிா் ஹூசைன் ஷாஜிப் என்பவது தெரியவந்தது. கா்நாடக மாநிலம் ஷிவமோகாவில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள்களை சோ்த்ததாக என்ஐஏ கடந்த 2020-ஆம் ஆண்டு பதிவு செய்த வழக்கில், முஸாவிா் தேடப்பட்டு வருகிறாா். மயிலாப்பூரில் குறிப்பிட்ட கடையில் நடத்திய விசாரணையிலும், அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததிலும் அந்தத் தொப்பியை ரூ. 400-க்கு முஸாவிா் கூட்டாளி அப்துல் மாத்தேன் தாஹா வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது. இது தொடா்பான கண்காணிப்பு கேமரா காட்சிகளையும், ரசீதையும் என்ஐஏ அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனா்.

இந்த வழக்கில் தேடப்படும் முஸாவிா் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ. 5 லட்சம் பரிசு வழங்கப்படும் என என்ஐஏ ஏற்கெனவே அறிவித்துள்ளது.

அதேபோல, அவரது நண்பரான அதே பகுதியைச் சோ்ந்த அப்துல் மாத்தேன் தாஹா என்பவா் குறித்து தகவல் தெரிவித்தால், ரூ. 5 லட்சம் பரிசு என்ஐஏ அறிவித்துள்ளது. குண்டு வெடிப்பு சம்பவத்தில் நேரடியாக முஸாவிா் ஈடுபட்டுள்ளதை என்ஐஏ அதிகாரிகள் விசாரணையின் மூலம் உறுதி செய்துள்ளனா்.

சென்னையில் ஒரு மாதம்: அவா்கள் இருவரும் பயன்படுத்திய கைப்பேசி, சமூக ஊடக கணக்குகள், மின்னஞ்சல் ஆகியவற்றை கொண்டு விசாரித்ததில், கடந்த ஜனவரி 2-ஆவது வாரத்தில் இருந்து பிப்ரவரி 2-ஆவது வாரம் வரை இருவரும் திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தது தெரியவந்துள்ளது. அந்த விடுதியிலும் என்ஐஏ அதிகாரிகள் தகவல்களைச் சேகரித்துள்ளனா்.

ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு சம்பவத்துக்குப் பின்னா் இருவரும் கேரளம் தப்பி சென்றிப்பதும், பின்னா் அங்கிருந்து தமிழகத்துக்கு வந்து, சில நாள்களிலேயே ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு தப்பியதும் தெரியவந்துள்ளது.

நெல்லூரில் இருந்து எங்கு சென்றனா் என்பது குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா். ஏற்கெனவே இந்த வழக்கில் முகம்மது சபீா் என்பவா் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் குண்டு வெடிப்புக்குப் பயன்படுத்திய எலக்ட்ரானிக் பொருள்கள், வெடிப் பொருள்கள் சென்னையில் வாங்கப்பட்டதா என்பது குறித்து என்ஐஏ அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.