ரஷ்யா தாக்குதலுடன் தொடர்புடைய 11 பேர் கைது
ரஷ்யாவின் மொஸ்கோவில் உள்ள திரையரங்கில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் 11 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 115ஆக அதிகரித்துள்ளதுடன் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 100ஐ கடந்துள்ளது.
தாக்குதலினால் உயிரிழந்த ஒருவரின் உறவினர்களுக்கு அந்நாட்டு பணத்தில் 3 மில்லியன் ரூபிள் மற்றும் காயமடைந்த ஒவ்வொருவருக்கும் 1 மில்லியன் ரூபிள் வழங்குவதாக ரஷ்ய அரசு அறிவித்துள்ளதுடன் தாக்குதல் சம்பவத்திற்கு ஐ.எஸ்.ஐ.எஸ்.கே (ISIS-K) என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இசைக்குழு
சம்பவத்தின் போது இராணுவத்தினர் போன்று உடையணிந்த நான்கு தாக்குதல்தாரிகள் இசை நிகழ்ச்சி நடைபெற்ற கட்டிடத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு மற்றும் கையெறி குண்டுகளை வீசியதாகவும் இசைக்குழு உறுப்பினர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தாக்குதலுடன், இசை நிகழ்ச்சி நடைபெற்ற மண்டபத்திலும் தீ பரவியதோடு 15 முதல் 20 நிமிடங்கள் வரை தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
காயமடைந்தவர்களில் குழந்தைகளும் உள்ளதுடன், இந்த பயங்கரவாத தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாகக் ரஷ்ய வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.