யாழில். கஞ்சாவுடன் கைதான கடற்படையினர் உள்ளிட்ட மூவரை பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி
யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கடற்படையை சேர்ந்த இருவரையும் , கஞ்சாவை வாங்க வந்த நபரையும் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த சனிக்கிழமை கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விற்பனையில் ஈடுபட்ட இருவரையும் , அதனை வாங்கிய நபரையும் கைது செய்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.
அதன் போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவரும் கடற்படையை சேர்ந்தவர்கள் எனவும் மற்றைய நபர் ஊரவர் எனவும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் மூவரையும் முற்படுத்தி , மூவரிடமும் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். அதனால் அவர்களை பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி வேண்டும் என கோரி இருந்தனர்.
பொலிசாரின் கோரிக்கையை ஏற்ற மன்று மூவரையும் 48 மணி நேரம் பொலிஸ் காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதித்தது.