தமிழ் படிக்க தெரியாமல் திணறிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர்! ஓமன் நாட்டில் படித்தவர் என்று சமாளிப்பு
விருதுநகர் நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு தமிழ் படிக்கத் தெரியாததால் தேர்தல் அலுவலரின் உதவியை நாடியது பேசுபொருளாகியுள்ளது.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர்
நாம் தமிழர் சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஒரே மேடையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்தார்.
இதில் 20 பெண் வேட்பாளர்களும், 20 ஆண் வேட்பாளர்களும் களமிறங்குகின்றனர். இவர்கள், தற்போது வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.
விருதுநகர் வேட்பாளர்
அந்தவகையில் விருதுநகர் மக்களவை போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கெளசிக் நேற்றுமுன் தினம் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது தேர்தல் உறுதிமொழி பத்திரத்தை வேட்பாளர் வாசிக்க வேண்டும்.
ஆனால், வேட்பாளர் கௌசிக்கிற்கு தமிழ் பேச மட்டுமே தெரியும், படிக்க தெரியாது என்று கூறியிருக்கிறார். இதனை கேட்டு தேர்தல் அலுவலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பின்னர், தேர்தல் அலுவலர் ஜெயசீலன், தேர்தல் உறுதிமொழிப் பத்திரத்தை வாசிக்க அதனை டாக்டர் கௌசிக் வாசிக்க உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
இவர் ஓமன் நாட்டில் படித்தவர் என்பதால் இவருக்கு தமிழ் தெரியாது என்று நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
தற்போது, நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு தமிழ் படிக்க தெரியாது என்ற செய்தி அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இது தொடர்பாக திராவிட இயக்க தமிழர் பேரவையின் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தமது சமூக வலைதளப் பக்கத்தில், “விருதுநகர்த் தொகுதியின், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கவுசிக், நேற்று மனுத்தாக்கல் செய்ய வந்த போது, உறுதிமொழியைப் படிக்கச் சொல்லியுள்ளனர்.
அவர் தனக்குத் தமிழ் படிக்கத் தெரியாது என்று சொல்லி விட்டாராம். நா……..ம் தமிழர்! ஆனால் தமிழ் மட்டும் தெரியாது” என்று கூறியுள்ளார்.