குவைத்தில் உள்ள குடியேற்றவாசிகள்! நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவு
குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான பொது மன்னிப்பு காலத்தை அந்த நாட்டு உள்நாட்டலுவல்கள் அமைச்சு வழங்கியுள்ளது.
இதன்படி, இந்த மாதம் 17 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 17 ஆம் திகதி வரைக்குள் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த பொது மன்னிப்பு காலம் நடைமுறையில் உள்ள 3 மாத காலப்பகுதிக்குள் நட்டவிரேதமாக குவைத்தில் தங்கியுள்ள அனைவரும், வெளியேற வேண்டுமென அந்த நாட்டு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
சட்டவிரோத குடியேற்றம்
சுமார் 19 ஆயிரத்து 620 இலங்கையர்கள் தற்போது குவைத்தில் செல்லுபடியான வீசா இன்றி சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குவைத் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள பொது மன்னிப்பு காலத்துக்குள் அந்த நாட்டில் இருந்து வெளியேருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த தரப்பினர் மீண்டும் குவைத்துக்குள் சட்டப்பூர்வமாக நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.
பொது மன்னிப்பு காலம்
மார்ச் மாதம் 14 ஆம் திகதி வரை சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட விசாயின்றி குவைத்தில் தங்கியிருந்த நபர்களுக்கு மாத்திரம் இந்த பொது மன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்தக் குற்றச்சாட்டுகளைத் தவிர, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது காவல் நிலையங்களில் அல்லது நீதிமன்றங்களில் வேறு ஏதேனும் குற்றச்சாட்டுகள் அல்லது முறைப்பாடுகள் இருந்தால் இந்த பொது மன்னிப்பு காலத்தைப் பயன்படுத்தி குவைத்திலிருந்து வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குவைத்தில் சட்ட விரோதமாகத் தங்கியிருக்கும் ஒருவர், குவைத்தில் சட்டப்பூர்வமாகத் தொடர்ந்து தங்க நினைத்தால், குவைத் அரசாங்கம் நிர்ணயித்த அபராதத் தொகையைச் செலுத்தி, செல்லுபடியாகும் விசாவைப் பெற்று, அந்நாட்டில் தங்குவதற்கான வாய்ப்பை குவைத் அரசு வழங்கவுள்ளது.