தேங்காய் பால் ஏற்றுமதி: அதிகரிக்கும் வருமானம்
தேங்காய் பால் ஏற்றுமதி 2024 பெப்ரவரி மாதம் மூலம் 2971 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
மத்திய வங்கியினால் மாதாந்த அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள ஏற்றுமதி அறிக்கையின் பிரகாரம், பெப்ரவரி மாதத்தில் 6739 மெற்றிக் தொன் தேங்காய்ப்பால் ஏற்றுமதியின் மூலம் இந்தத் தொகை ஈட்டப்பட்டுள்ளது.
அத்தோடு, 2023 பெப்ரவரி மாதம் 4366 மெற்றிக் தொன் தேங்காய்ப்பால் ஏற்றுமதி செய்யப்பட்டு 2401 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டதாகவும் தென்னை அபிவிருத்தி அதிகார சபை கூறியுள்ளது.
ஏற்றுமதி வருமானம்
ஏற்றுமதி செய்யப்பட்ட தேங்காய்ப்பாலின் அளவைப் பொறுத்தமட்டில், 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024 பெப்ரவரியில் 2373 மெற்றிக் தொன்கள் அதிகரித்துள்ளதுடன், ஏற்றுமதி வருமானமும் 570 மில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு கடும் வறட்சியை தொடர்ந்து பெய்த மழையால், தென்னை உற்பத்தியும் அதிகரித்தது.
இலங்கையில் 2023 நவம்பரில் 22 சதவீதமும், டிசம்பரில் 5 சதவீதமும், 2024 ஜனவரியில் 18 சதவீதமும், பெப்ரவரியில் 25 சதவீதமும் தேங்காய் உற்பத்தி அதிகரித்துள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
தேங்காய்களின் அளவு
2023 ஆம் ஆண்டில், தேங்காய்களின் மொத்த உற்பத்தி 3000 மில்லியன் தேங்காய்களைத் தாண்டியுள்ளது மற்றும் தொழிற்சாலைகளுக்கு ஒதுக்கப்பட்ட தேங்காய்களின் அளவு 1380 மில்லியன் தேங்காய்களாகும்.
எவ்வாறாயினும், தேங்காய் ஏற்றுமதியின் வருமானம் இந்த வருடத்தில் முதல் தடவையாக ஒரு பில்லியன் டொலர்களாக உயரும் என தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீரவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தகவல் வெளியாகியுள்ளது.