மாட்டின் சிறுநீரில் குளித்து, சாணத்தை சன் ஸ்க்ரீமாக பயன்படுத்தும் மக்கள்… எங்கே தெரியுமா?
மாட்டின் சிறுநீரில் குளித்து அதனுடைய சாணத்தை சன் ஸ்கிரீமாக ஒரு தரப்பு மக்கள் இன்றளவும் பயன்படுத்தி வருகின்றனர். அது குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று இணையத்தில் அதிகம் படிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் பசுக்கள் அதிகம் மதிக்கப்படும் விலங்காக உள்ளது. இது குழந்தைகள் முதல் பெரியவர் வரை பயன்படுத்தும் பாலை தருவதுடன் அதன் சாணம் மிகச் சிறந்த இயற்கை உரமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியா போன்று மற்ற பல உலக நாடுகளிலும் பசுக்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
அந்த வகையில் ஆப்பிரிக்கா மகண்டத்தில் உள்ள தெற்கு சூடான் நாட்டில் பசுக்களின் சிறுநீரை அங்கு வாழும் பழங்குடியின மக்கள் ஒரு தரப்பினர் குளிப்பதற்கு பயன்படுத்துகின்றனர். அத்துடன் பசுக்கள் வெளியேற்றும் சாணத்தை அவர்கள் சூரிய வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் சன் ஸ்கிரீமாக பயன்படுத்துகின்றனர்.
தெற்கு சூடான் நாட்டில் அன்கோல் வதுசி என்ற இனத்தைச் சேர்ந்த மாடுகள் 8 அடி உயரம் வரை வளரக்கூடியவை. இவை 500 அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 41,000 விலை மதிப்பு உடையவை. இந்த வகை மாடுகள் முண்டாரி எனப்படும் பழங்குடியின மக்களிடம் அதிகம் உள்ளது.
இதனை அவர்கள் மிகப்பெரும் சொத்தாக மட்டுமின்றி அதனை தங்களுடைய கௌரவ சின்னங்களாகவும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த பசுக்களை பாதுகாப்பதற்காக பழங்குடியின மக்கள் ஆயுதங்களை வைத்துள்ளனர். குறிப்பாக பசுக்களை பாதுகாப்பதில் இயந்திர துப்பாக்கிகளை கொண்ட காவலர்கள் பணிக்கு நிறுத்தப்படுகிறார்கள். அங்கு மாடுகளின் சிறுநீர் குளிப்பதற்கு மட்டுமின்றி வீடுகளில் தெளிப்பதற்கும், பல் துலக்குவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
பசுக்களின் சிறுநீரில் உள்ள அம்மோனியா பழங்குடியின மக்களின் தலை முடியை ஆரஞ்சு நிறமாக மாற்றியுள்ளது. முண்டாரி பழங்குடி மக்கள் பயன்படுத்தும் அன்கோல் வதுசி என்ற மாடுகள் இறைச்சிக்காக மிகக் குறைந்த எண்ணிக்கையில் கொல்லப்படுகின்றன. இதற்கு அதன் விலை அதிகமாக இருப்பது முக்கிய காரணமாகும். பழங்குடியின மக்களிடையே நடக்கும் திருமணங்களின் போது வரதட்சணை பொருளாக இந்த அன்கோல் வதுசி இன மாடுகள் வழங்கப்படுகின்றன.