மலையக பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு
பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கான ஆசிரியர் உதவியாளர்களுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அதன்படி, அடுத்த சில வாரங்களில் பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கான 2,535 ஆசிரியர் உதவியாளர்களுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டின் (2024) மே மாதத்திற்குள் பாடசாலைகளில் நியமனங்கள், ஆரம்ப பயிற்சிகள் மற்றும் பதவிகளை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் பிரேமஜயந்த மேலும் தெரிவித்தார்.
அதிகாரிகளுக்கு பணிப்புரை
தோட்டத் துறைப் பாடசாலைகளில் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாகத் தெரிவித்த அவர், கல்லூரிக்குத் தகுதிபெறும் மாணவர்களே மிகக் குறைவு என்றும் பட்டதாரிகளில் ஒரு சிலரே உள்ளனர் எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.
எனவே இந்த பற்றாக்குறைக்கு தீர்வு காணும் முகமாக ஊவா மற்றும் மத்திய மாகாணங்களைச் சேர்ந்த பட்டதாரிகளுக்கு ஆரம்ப கட்ட நடவடிக்கையாக நியமனம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் இது தொடர்பாக உரிய மாகாண அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.