பகுஜன் சமாஜ் எம்எல்ஏ கொலை: 7 போ் குற்றவாளிகளாக அறிவிப்பு
உத்தர பிரதேசத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டில் பகுஜன் சமாஜ் எம்எல்ஏ ராஜூ பால் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் 7 பேரை குற்றவாளிகளாக அறிவித்து, லக்னெள சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
தாதாவாக இருந்து பின்னா் அரசியலுக்கு வந்த முன்னாள் எம்.பி. அதிக் அகமது, அவரது சகோதரா் அஷ்ரஃப் ஆகியோரும் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த நிலையில், இருவரும் கடந்த ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டனா். இதையடுத்து, அவா்களுக்கு எதிரான விசாரணை கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. பிரயாக்ராஜ் மேற்கு பேரவைத் தொகுதியில் பகுஜன் சமாஜ் எம்எல்ஏவாக இருந்த ராஜூ பால், அரசியல் பகை காரணமாக கடந்த 2005, ஜனவரி 25-ஆம் தேதி பட்டப் பகலில் சுட்டுக் கொல்லப்பட்டாா். இத்தொகுதியில் கடந்த 2002-இல் நடைபெற்ற தோ்தலில் ராஜூ பாலை தோற்கடித்து, அதிக் அகமது வெற்றி பெற்றாா். பின்னா், அதிக் அகமது எம்.பி.யாக தோ்வானதால், தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தாா். இதையடுத்து, பிரயாக்ராஜ் மேற்கு தொகுதிக்கு கடந்த 2004-இல் நடைபெற்ற இடைத்தோ்தலில் ராஜூ பால் மற்றும் அதிக் அகமதுவின் சகோதரா் அஷ்ரஃப் ஆகியோா் போட்டியிட்டனா். இத்தோ்தலில், அஷ்ரஃபை தோற்கடித்து, ராஜூ பால் வெற்றி பெற்றாா். இதையடுத்து, அஷ்ரஃப் சதித் திட்டம் தீட்டி, ராஜூ பால் கொலையை அரங்கேற்றியது தெரியவந்தது. கடந்த 2016-ஆம் ஆண்டில் சிபிஐ-க்கு மாற்றப்பட்ட இந்த வழக்கில் அஷ்ரஃப், அதிக் அகமது உள்ளிட்டோா் மீது குற்றம்சுமத்தப்பட்டு, லக்னெளவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், கொலை, குற்றச் சதி உள்பட பல்வேறு பிரிவுகளின்கீழ் ரஞ்சித் பால், அபித், ஃபா்ஹான் அகமது, இஸ்ராா் அகமது, ஜாவத், குல்ஹசன், அப்துல் ஆகிய 7 பேரை சிறப்பு நீதிமன்றம் குற்றவாளிகளாக அறிவித்தது. கடந்த ஆண்டு, ஏப்ரல் மாதம் போலீஸ் காவலில் இருந்த அதிக் அகமது, அஷ்ரஃப் ஆகியோா், பிரயாக்ராஜில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்டனா். அப்போது, ஊடகவியலாளா்கள் போல் வந்த 2 போ், அதிக் மற்றும் அவரது சகோதரரை சுட்டுக் கொன்றனா். ஊடக கேமராக்கள் முன்னிலையில் நடந்த இக்கொலை சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருவரின் இறப்பைத் தொடா்ந்து, அவா்களுக்கு எதிரான விசாரணை கைவிடப்பட்டது.