மர்ஹூம் மையோன் முஸ்தபா ஞாபகார்த்த இப்தார் நிகழ்வு
முன்னாள் பிரதி அமைச்சரும் பிரபல சமூக சிந்தனையாளருமான மர்ஹூம் மையோன் முஸ்தபா அவர்களின் ஞாபகார்த்தமாக அவர்களது புதல்வர்களான மயோன் குரூப் ஒப் கம்பெனி இன் தவிசாளரும் சமூக சேவையாளரும் எடுகேசன் அமைப்பின் தலைவருமான றிஸ்லி முஸ்தபா மற்றும் மையோன் நிறுவனத்தின் பணிப்பாளர் றம்லி முஸ்தபா ஆகியோரினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்தார் நிகழ்வு நிகழ்வு சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் 2024.03.30 ஆம் திகதி இடம்பெற்றது.
பெருமளவான மக்களும் அரசியல் பிரமுகர்கள் பலரும் பங்குகொண்டிருந்த இந்நிகழ்வில் சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் பேஷ் இமாம் அஷ் செய்க். எம்.ஐ.எம். ஆதம்பாவா (றஷாதி) அவர்கள் மார்க்க சொற்பொழிவாற்றினார். அத்துடன் துஆ பிராத்தனையும் இடம்பெற்றது.
நிகழ்வின்போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றவூப் ஹக்கீம், தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எல். சம்சுதீன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான ஏ.எம்.ஜெமில், கே.எம். அப்துல் றஸ்ஸாக், கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வர் றஹ்மத் மன்சூர், நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ. தாஹிர், முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ. அன்ஸில் உள்ளிட்ட பிரமுகர்களுடன் உலமாக்கள் கல்விமான்கள் அதிபர்கள் என பலரும் பங்குகொண்டிருந்தனர்.
நிகழ்வில் முன்னாள் பிரதி அமைச்சர் மர்ஹூம் மையோன் முஸ்தபா தொடர்பான நினைவலைகளை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றவூப் ஹக்கீம் எடுத்துக் கூறினார். அவரது உரையில் மர்ஹூம் மையோன் முஸ்தபா அவர்கள் கல்முனையை வடிவமைப்பதில் கொண்டிருந்த கரிசனையை எடுத்துக் கூறினார். இறுதியாக பாடசாலை அதிபர்களால் றிஸ்லி முஸ்தபா அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கும் நிகழ்வு ஒன்றும் இடம்பெற்றது. அத்துடன் றிஸ்லி முஸ்தபா அனைவருக்கும் நன்றிகூறி உரையாற்றினார்.