தமிழரசுக் கட்சியின் ஆதரவின்றி ஜனாதிபதியாக எவரும் வரமுடியாது: சாணக்கியன் பகிரங்கம்
அடுத்த ஜனாதிபதியாக வர நினைக்கின்ற எவருமே தமிழரசு கட்சியின் ஆதரவு இன்றி ஜனாதிபதியாக வரமுடியாதளவிற்கு தமிழரசு கட்சியை பலப்படுத்திக் கொள்வது தான் எங்களுக்கு தற்போது இருக்கும் பொறுப்பு என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
தந்தை செல்வாவின் 126 ஜனன தினத்தையிட்டு நேற்று(31) தமிழரசுக்கட்சி ஏற்பாட்டில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு மட்டக்களப்பில் தந்தை செல்வா பூங்காவில் இடம்பெற்ற போது அவரது திரு உருவச்சிலைக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
முதலாவது மாநாடு
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த வருடம் இரண்டு தேர்தல்கள் வருவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றது இதில் எந்த தேர்தல் முதல்வரும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு மட்டுமே தெரியும்.
இலங்கை தமிழரசு கட்சியின் முதலாவது மாநாட்டில் எந்தொரு சந்தர்பத்திலும் நான் எங்கள் மக்களையும் மண்ணையும் பாதுகாக்கும் வகையில் செயற்படவேண்டும். இல்லாவிடில் எங்கள் மக்களுக்கும் மண்ணுக்கும் எதிரான விடையத்தையும் செய்யக்கூடாது இதை பாதுகாப்பது தான் கட்சியின் பிரதானமான பொறுப்பு என தந்தை செல்வா சொன்னார்.
அன்று தொடக்கம் இன்று வரைக்கும் 75 வருடங்களுக்கு மேலாக இந்த மக்களுக்காக அரசியல் ரீதியாக தொடர்ச்சியாக குரல் கொடுத்துவரும் ஒரு கட்சி தமிழரசு கட்சி மட்டும்தான்.
தேர்தல் ஆணைக்குழு
தமிழ் தேசிய பரப்பில் போலிகட்சிகளும் இருக்கின்றது ஆனால் தமிழரசுக் கட்சிதான் நல்ல கட்சி என அனைவருக்கும் தெரியும். இந்த வருடம் இரண்டு தேர்தல்கள் வரும் இருந்தபோதும் இலங்கை சட்டத்தின்படியும் அரசியல் அமைப்பின்படி முதலாவது ஜனாதிபதி தேர்தல்தான் வரவேண்டும்.
அதேவேளை இலங்கையில் நடக்கும் ஒரே ஒரு தேர்தல் மட்டும்தான் தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைத்து செய்யக் கூடிய ஒரு தேர்தல் ஜனாதிபதி தேர்தல் தான். எதிர்வரும் 6ஆம் மாதத்தின் பிற்பாடு ஜனாதிபதியின் பொறுப்புக்கள் அனைத்தும் தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்க வேண்டும்.
உள்ளூராட்சி மாகாணசபை தேர்தல் பிற்போட்டது போல ஜனாதிபதி தேர்தலும் பிற்போட முயற்சி எடுக்கலாம் ஆனால் அவ்வாறான சூழ்நிலையில் ஜனாதிபதி தேர்தல் தான் வரவேண்டும்.
ஆனால் ஜனாதிபதி ரணிலுக்கு தேர்தலில் தான் வெல்லக் கூடிய சூழ்நிலை இல்லாமல் போய்விடும் தனக்கு ஜனாதிபதியாக வரமுடியாத ஒரு சூழல் அமையலாம் என ஒரு சிந்தனை ஜனாதிபதிக்கு வந்தால் அரசியல் அமைப்பின்படி நாடாளுமன்றத்தை எப்போது வேண்டும் என்றாலும் கலைக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச கிளையின் தலைவர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான கி.துரைராஜசிங்கம், ஞா.சிறிநேசன், பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் உட்பட பலர் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.