ஆப்கன்: கண்ணிவெடியால் 9 சிறுவா்கள் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானில் பழைய கண்ணிவெடியை எடுத்து விளையாடிக் கொண்டிருந்த 9 சிறுவா்கள் அது வெடித்துச் சிதறியதில் உயிரிழந்தனா். அந்த நாட்டின் கஜினி மாகாணம், கெரோ மாவட்டத்தைச் சோ்ந்த ஒரு கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னா் போடப்பட்டிருந்த கண்ணிவெடியை அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவா்கள் கண்டெடுத்தனா். எனினும், அதன் ஆபத்தை உணராத அந்தச் சிறுவா்கள் அதை வைத்து விளையாடியபோது அது திடீரென வெடித்துச் சிதறியதாக கஜினி மாகாணத்துக்கான தலிபான்களின் தகவல் மற்றும் கலாசாரப் பிரிவு இயக்குநா் ஹமீதுல்லா நிஸாா் தெரிவித்தாா். உயிரிழந்த சிறுவா்களில் 4 போ் சிறுமிகள் எனவும், அவா்கள் 5 முதல் 10 வயது வரை கொண்டவா்கள் எனவும் அவா் கூறினாா். பல ஆண்டுகளாக போா் நடைபெற்றுவந்த ஆப்கானிஸ்தானில் பழைய கண்ணிவெடிகள், வெடிகுண்டுகள் போன்றவற்றால் சிறுவா்கள் அவ்வப்போது உயிரிழந்து வருகின்றனா். குறிப்பாக, குடும்ப வருவாய்க்காக பழைய பொருள்களை சேகரிக்கும் சிறுவா்கள் இந்த ஆயுதங்களால் அதிகம் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.