;
Athirady Tamil News

தேர்தல் சூட்டோடு பற்றிக் கொண்ட “கச்சதீவு” விவகாரம் மோடியுடன் மோதும் ஸ்டாலின் !

0

இந்திய பாராளுமன்ற தேர்தல் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டாலே போதும் மக்களும், வேட்பாளர்களும் உஷாராகி விடுவார்கள். இலவசங்கள், பண நோட்டுகள் என அனைத்தும் மக்களை துரத்த ஆரம்பித்து விடும். அது மாத்திரமன்றி அரசியல் தலைவர்களும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விழித்துக் கொண்டவர்கள் போன்று தங்களை சுதாகரித்துக்கொள்வார்கள். மறந்து போன விடயங்கள் பலவும் அவர்களுக்கு நினைவுக்கு வந்து விடும். சபாஷ் சரியான போட்டி என்ற நிலையில் தேர்தல் களம் சூடேறிவிடும். அந்த நிலைதான் தமிழகத்தில் தொடக்கியுள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ஆம் திகதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று, ஜூன் 4ஆம் திகதி வாக்கு எண்ணும் பணி ஆரம்பமாகும்.

லோக்சபா இடங்களின் அடிப்படையில் தமிழ்நாடு ஐந்தாவது இடத்தில் உள்ளது. கடந்த 2019 தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மொத்தமுள்ள 39 இடங்களில் 38 இடங்களை கைப்பற்றி , அமோக வெற்றி பெற்றது.

ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரங்களைத் தொடங்கியுள்ளன. இத்தகைய சூழலில் கச்சதீவு விவகாரத்தை பா.ஜ.க. தற்போது கையிலெடுத்து காங்கிரசையும், தி.மு.க.வையும் கடுமையாக விமர்சித்து வருகிறது.இதனை தமிழக ஊடகங்கள், முக்கிய செய்தியாக பிரசுரித்து தூசி தட்டிவிட்டுள்ளன. முதலில் பிரதமர் மோடி இந்த விவகாரத்தை ஆரம்பித்து வைத்தார்.

அதாவது பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் கடந்த 31 ஆம் திகதி வெளியிட்டிருந்த பதிவில், கச்சதீவை இலங்கைக்கு காங்கிரஸ் எப்படி விட்டு கொடுத்தது என்பதற்கு புதிய ஆதாரம் கிடைத்துள்ளது. இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, நலன்களை பலவீனப்படுத்துவதே காங்கிரஸின் 75 ஆண்டு கால வரலாறாக உள்ளது. காங்கிரஸை எப்போதும் நம்பக்கூடாது என்று மக்கள் மனதில் உறுதியான நம்பிக்கை உள்ளது. கச்சதீவு விவகாரத்தில் இந்தியர்கள் ஒவ்வொருவரையும் காங்கிரஸ் கோபத்தில் ஆழ்த்தி உள்ளது” என தெரிவித்துள்ளார்.

மீனவப் பெண்களின் நலன்களுக்குப் பாதிப்பு !

அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி கச்சதீவு விவகாரம் குறித்த ஆங்கில நாளேட்டின் கட்டுரையை குறிப்பிட்டு எக்ஸ் சமூக வலைத்தளத்தில் கடந்த முதலாம் திகதி வெளியிட்டுள்ள பதிவில், “தமிழகத்தின் நலனைக் காக்க தி.மு.க. எதுவும் செய்யவில்லை. கச்சதீவில் வெளிவரும் புதிய விவரங்கள் தி.மு.க.வின் இரட்டை வேடத்தை முற்றிலுமாக அவிழ்த்துவிட்டுள்ளன. காங்கிரசும், தி.மு.க.வும் குடும்ப கட்சிகள். அவர்கள் தங்கள் சொந்த மகன்கள் மற்றும் மகள்கள் உயர வேண்டும் என்று மட்டுமே கவலைப்படுகிறார்கள். அவர்கள் வேறு யாரையும் பொருட்படுத்துவதில்லை. கச்சதீவு மீதான அவர்களின் அடாவடித்தனம், குறிப்பாக நமது ஏழை மீனவர்கள் மற்றும் மீனவப் பெண்களின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.

அண்ணாமலை விவகாரம்

முன்னதாக , கச்­ச­தீவு இலங்­கைக்கு கொடுக்­கப்­பட்ட சம்­ப­வத்தின் பின்­னணி தொடர்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக திரட்­டப்­பட்ட தக­வல்கள் சில­வற்­றையும் பா.ஜ.க பிரமுகர் அண்­ணா­மலை தனது எக்ஸ் பதிவில் குறிப்­பிட்­டுள்ளார். அதில் இந்­தியா சுதந்­திரம் அடைந்­தது முதலே இலங்கை உரிமை கோரி­ய­­தா­கவும் மிகச்­சி­றிய தீவான கச்­ச­தீ­வுக்கு பெரிய அளவில் முக்­கி­யத்­துவம் தர வேண்­டிய அவ­சி­ய­மில்லை எனவும் அப்­போ­தைய பிர­தமர் நேரு கூறி­ய­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்ளது.

மேலும், சச்­சதீவை இலங்­கைக்கு கொடுக்கும் தீர்­மானம் தொடர்பில் 1974ஆம் ஆண்டு அப்­போ­தைய தமிழ்­நாடு முத­ல­மைச்சர் கரு­ணா­நி­தி­யிடம் வெளி­யு­ற­வுத்­துறை செய­லா­ளரே தெரி­வித்­த­தா­கவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இதை­ய­டுத்து, தகவல் அறியும் உரிமை சட்­டத்தின் கீழ் திரட்­டப்­பட்ட தக­வலை கொண்ட அண்ணாமலையின் பதி­வு­களை மேற்கோள் காட்டி பிர­தமர் நரேந்­திர மோடி அவ­ரது எக்ஸ் தளத்தில் பகிர்ந்­துள்ளார். அதில் கச்­ச­தீவு தாரை வார்க்கப்பட்ட சம்­பவம் ஒவ்­வொரு இந்­தி­ய­னையும் கோபப்­ப­டுத்­து­வ­தாக தெரி­வித்­துள்ள மோடி, கச்­ச­தீவு தாரை வார்க்கப்பட்ட சம்­ப­வத்தில் காங்­கிரஸ் துரோ­க­மி­ழைத்து விட்டதாகவும் இனி காங்கிரஸை ஒருபோதும் நம்ப முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

கும்பகர்ணத் தூக்கம்

இந்நிலையில், பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பத்தாண்டுகளாகக் கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்துவிட்டு, தேர்தலுக்காகத் திடீர் மீனவர் பாச நாடகத்தை அரங்கேற்றுபவர்களிடம் தமிழ்நாட்டு மக்கள் கேட்கும் கேள்வி மூன்றுதான்.

1.) தமிழ்நாடு ஒரு ரூபாய் வரியாகத் தந்தால், ஒன்றிய அரசு 29 பைசா மட்டுமே திருப்பித் தருவது ஏன்?.

2.) இரண்டு இயற்கைப் பேரிடர்களை அடுத்தடுத்து எதிர்கொண்டபோதும், தமிழ்நாட்டுக்கு ஒரு ரூபாய் கூட வெள்ள நிவாரணம் வழங்காதது ஏன்?.

3.) பத்தாண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட சிறப்புத் திட்டம் என ஒன்றாவது உண்டா?. திசைதிருப்பல்களில் ஈடுபடாமல், இதற்கெல்லாம் விடையளியுங்கள் பிரதமர் அவர்களே… பதில் சொல்லுங்க மோடி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சீனா அபகரிப்பு !

இந்நிலையில் பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் முன்னாள் மத்திய அமைச்சரும், பாரா ளுமன்ற உறுப்பினருமான ப.சிதம்பரம் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கடந்த 1974ஆம் ஆண்டில் இரு நாடுகளிடயே நடந்த பரிமாற்றத்தைத் மோடி இப்பொழுது ஏன் கிளப்புகிறார்?. கச்சதீவின் பரப்பளவு 1.9 சதுர கி.மீ. அதனைத் தந்து 6 இலட்சம் இலங்கைத் தமிழர்களை மீட்டு அவர்களுக்குச் சுதந்திரமும் புது வாழ்வும் தந்தவர் இந்திரா காந்தி.

மோடி செய்தது என்ன?. 2000 சதுர கி.மீ இந்திய பூமியைச் சீனா அபகரித்திருக்கிறது. ‘எந்தச் சீனத் துருப்புகளும் இந்திய மண்ணில் இல்லை’ என்று சொல்லி சீனாவின் ஆக்கிரமிப்பை மோடி நியாயப்படுத்தினார். மோடியின் பேச்சை சீனா உலகமெங்கும் பரப்பியது. சீனா அபகரித்துள்ள நிலம் ஒரு சிறிய தீவை விட 1,000 மடங்கு பெரியது. நல்லுணர்வுடன் பரிமாற்றம் வேறு, காழ்ப்புணர்வுடன் அபகரிப்பது வேறு” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் விளக்கம் !

இந்நிலையில் கச்சதீவு விவகாரம் குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, “கடந்த 1974 ஆம் ஆண்டில், இந்தியாவும் இலங்கையும் ஒரு கடல் எல்லையை வரைந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன, மேலும் கடல் எல்லையை வரைவதில் கச்சதீவு இலங்கையின் எல்லையில் இருக்குமாறு வரையப்பட்டன. காங்கிரஸும், தி.மு.க.வும் இந்த விவகாரத்தில் தங்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை என்பது போல அணுகியுள்ளன. கடந்த 20 ஆண்டுகளில், 6 ஆயிரத்து 184 இந்திய மீனவர்கள் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டனர். 1,175 இந்திய மீன்பிடி படகுகள் இலங்கையால் கைப்பற்றப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டன. இன்று விவாதிக்கும் பிரச்சினையின் பின்னணி இதுதான்.

கடந்த ஐந்தாண்டுகளில் கச்சதீவு பிரச்சினை, மீனவர் பிரச்சினை என பல்வேறு கட்சிகள் பாரா ளுமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றன. பாராளுமன்ற கேள்விகள், விவாதங்கள் மற்றும் ஆலோசனைக் குழுவில் இது பற்றி வந்துள்ளன. அப்போதைய தமிழக முதல்வர் எனக்கு பலமுறை கடிதம் எழுதியுள்ளார். தற்போதைய முதல்வரிடம், இந்த பிரச்சினைக்கு 21 முறை பதில் அளித்துள்ளேன் என்பதை எனது பதிவு காட்டுகிறது. இது திடீரென்று தோன்றிய பிரச்சினை அல்ல. இது ஒரு நேரடி பிரச்சசினை. இது பாராளுமன்றத்திலும், தமிழக வட்டாரங்களிலும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே கடிதப் பரிமாற்றம் நடந்துள்ளது. இப்போது தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு அரசியல் கட்சியும் இதைப் பற்றி ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. அதற்கு அவர்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. இன்றைய மத்திய அரசு தீர்த்து வைக்க வேண்டிய சூழல் இருந்தாலும், இதற்கு வரலாறே இல்லை, இது இப்போதுதான் நடந்திருக்கிறது.இவர்கள்தான் போராட்டம் நடத்துகிறார்கள். அப்படித்தான் அவர்கள் அதை முன்னிறுத்த விரும்புகிறார்கள்.

இதை யார் செய்தார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். யார் மறைத்தார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது. இந்த நிலை எப்படி வந்தது என்பதை அறியும் உரிமை பொதுமக்களுக்கு உள்ளது என்று நாங்கள் நம்புகிறோம். இன்று, பொதுமக்கள் தெரிந்து கொள்வதும், மக்கள் தீர்ப்பளிப்பதும் முக்கியம். இந்த பிரச்சனை பொதுமக்களின் பார்வையில் இருந்து நீண்ட காலமாக மறைக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் இலங்கை கடற்படையால் இன்றும் தடுத்து வைக்கப்படுகிறார்கள், படகுகள் இன்னும் பறிமுதல் செய்யப்படுகிறது. இன்னும் இது குறித்து பாரா ளுமன்றத்தில் பிரச்சனை எழுப்பப்படுகிறது. அதுவும் இதனைச் செய்த இரு கட்சிகளால் பாரா ளுமன்றத்தில் எழுப்பப்படுகிறது. கைது செய்யப்பட்டார், எப்படி விடுவிக்கப்பட்டார்கள் என்று நினைக்கிறீர்கள். சென்னையில் இருந்து அறிக்கை கொடுப்பது மிகவும் நல்லது, ஆனால் வேலை செய்பவர்கள் நாங்கள்தான்.

நேருவுக்கு, இது ஒரு குட்டித் தீவு

நாங்கள் 1958 மற்றும் 1960 பற்றி பேசுகிறோம். குறைந்த பட்சம் மீன்பிடி உரிமையாவது எங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று வழக்கின் முக்கிய நபர்கள் விரும்பினர். கச்சதீவு 1974 இல் இலங்கைக்கு வழங்கப்பட்டது. 1976 இல் மீன்பிடி உரிமை வழங்கப்பட்டது. ஒன்று, மிக அடிப்படையான தொடர்ச்சியான (அம்சம்) இந்தியாவின் நிலப்பரப்பில் அப்போதைய மத்திய அரசும், பிரதமர்களும் காட்டிய அலட்சியம். அது பற்றி அவர்கள் கவலைப்படவில்லை என்பதுதான். கச்சதீவு குறித்து கடந்த

மே 1961 இல் நேரு, ‘இந்தச் சிறிய தீவுக்கு நான் எந்த முக்கியத்துவமும் கொடுக்கவில்லை. அதன் மீதான எங்கள் கோரிக்கையை விட்டுக்கொடுக்க எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. இது போன்ற விஷயங்கள் காலவரையின்றி நிலுவையில் இருப்பதும், மீண்டும் மீண்டும் பாரா ளுமன்றத்தில் எழுப்பப்படுவதும் எனக்குப் பிடிக்கவில்லை’ எனத் தெரிவித்திருந்தார். எனவே நேருவுக்கு, இது ஒரு குட்டித் தீவு. அதற்கு முக்கியத்துவம் இல்லை, அவர் அதை ஒரு தொல்லையாகப் பார்த்தார். இலங்கைக்கு எவ்வளவு சீக்கிரம் கொடுக்கிறீர்களோ, அவ்வளவு நல்லது. இந்த பார்வை இந்திரா காந்திக்கும் தொடர்ந்தது” எனத் தெரிவித்தார்.

காங்கிரசுடன் திமுக உறவு வைத்திருப்பதன் மர்மம் என்ன?

கச்சதீவு தாரைவார்ப்பு மன்னிக்க முடியாத துரோகம்: அதை நியாயப்படுத்தும் காங்கிரசுடன் திமுக உறவு வைத்திருப்பதன் மர்மம் என்ன? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார் .இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்த கச்சத்தீவை இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசு, இலங்கைக்கு தாரை வார்த்தது மன்னிக்க முடியாத துரோகம் ஆகும். இதை ஐம்பதாண்டுகளுக்கு முன்பு நடத்த நிகழ்வாக கடந்து சென்று விட முடியாது. கச்சதீவை தாரை வார்க்கப்பட்டதன் விளைவுகளை இன்று வரை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த 800-க்கும் கூடுதலான மீனவர்கள் இலங்கைப் படையினரால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டதற்கும், 6184 மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கும், 1175 மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டதற்கும் கச்சதீவு தாரை வார்க்கப்பட்டது தான் காரணம். அதற்கு காரணமானவர்களை எந்தக் காலத்திலும் மன்னிக்க முடியாது.

கச்சதீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டதை அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த கலைஞர், தெரிந்தே அனுமதித்தார்.கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்க்கும் முடிவை இந்திரா தலைமையிலான மத்திய அரசு எடுத்த போது கலைஞர் தலைமையிலான தி.மு.க ஆட்சியில் தான். கச்சதீவை இலங்கையிடம் ஒப்படைக்கும் ஒப்பந்தம் 1974 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26 ஆம் தேதி இலங்கையிலும், 28 ஆம் தேதி டில்லி யிலும் கையெழுத்திடப்பட்டது. அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த கலைஞர் இதைத் தடுக்க எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

ஆனால், இந்த முடிவை திமுக எதிர்ப்பதாக காட்டிக் கொள்வதற்காக , கச்சதீவு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதற்கு அடுத்த நாள் 29.06.1974 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி பெயருக்கு ஒரு தீர்மானம் நிறைவேற்றினார். அதன்பின் 21.08.1974 அன்று தமிழக சட்டசபையில் கச்சதீவு தொடர்பாக மத்திய அரசுக்கு வலிக்காமல் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கச்சதீவு தாரை வார்க்கப்பட்டதை கலைஞர் எதிர்க்காமல் இருந்ததற்கு காரணங்கள் உள்ளன. அப்போதைய கலைஞர் அரசு மீது ஏராளமான ஊழல் புகார்கள் கூறப்பட்டன. எம்.ஜி.ஆரும், இடதுசாரிகளும் கலைஞருக்கு எதிராக ஊழல் புகார்களை மத்திய அரசிடம் அளித்து அதனடிப்படையில் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இதனால் கலைஞர் அரசை எந்த நேரமும் கலைத்து விட்டு ஊழல் புகார்கள் குறித்து விசாரணை நடத்துவோம் என மத்திய அரசு மிரட்டி வந்தது. அதற்கு பயந்து தான் கலைஞர் அமைதியாக இருந்துவிட்டார் என்று அப்போதே குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவற்றை இப்போதும் மறுக்க முடியாது.

ப.சிதம்பரம் கருத்து

இலங்கைக்கு கச்சதீவு தாரைவார்க்கப்பட்டதை காங்கிரஸ் கட்சி இப்போதும் நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறது. அது நல்லுணர்வுடன் கூடிய பரிமாற்றம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறுகிறார். ஆனால், கச்சதீ வு தாரைவார்க்கப்பட்டதை எதிர்ப்பதாக இப்போதும் திமுக கூறுகிறது. இந்த சிக்கலில் திமுக மற்றும் காங்கிரசின் நிலைப்பாடுகள் முரண்பாடுகளின் மூட்டையாகவே உள்ளது.

மேலும் ,நெருக்கடி நிலை நடைமுறைப்படுத்தப்பட்டது, கல்வி உள்ளிட்ட மாநில அரசுப் பட்டியலில் இருந்த அதிகாரங்கள் காங்கிரஸ் அரசால் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது, ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்கள் இலங்கையில் படுகொலை செய்யப்பட்டது என பல விவகாரங்களில் திமுக – காங்கிரசின் நிலைப்பாடுகள் முரண்பாடுகளின் உச்சமாகவே உள்ளன. ஆனாலும், கூடா நட்பு கேடாய் முடியும் என்று விமர்சிக்கப்பட்ட காங்கிரசுடன் திமுக இப்போதும் கூட்டணி வைத்திருப்பதன் மர்மம் என்ன? மு.க.ஸ்டாலின் விளக்குவாரா?”எனக் கேட்டுள்ளார்.

கச்சத்தீவு ஒப்பந்தம்

இந்த தீவு இலங்கையின் நெடுந்தீவு மற்றும் இந்தியாவின் ராமேஸ்வரம் ஆகிய இடங்களுக்கு இடையில் அமைந்துள்ளது . கச்சதீவின் நிலப்பரப்பு என்ன? கச்சத்தீவின் நீளம் மொத்தம் 1.5 கிலோ மீட்டர்; கச்சத்தீவின் அகலம் 350 மீட்டர். கச்சத்தீவின் மொத்தப் பரபரப்பளவு 285 ஏக்கர். மற்றும் பாரம்பரியமாக இலங்கை தமிழ் மற்றும் தமிழக மீனவர்களால் பயன்படுத்தப்படுகிறது1974 இல், அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, பாக்குநீரிணையில் கடல் எல்லைகளைத் தீர்க்கும் நோக்கில் “இந்தோ-இலங்கை கடல்சார் ஒப்பந்தத்தின்” கீழ் கச்சதீவை இலங்கைப் பகுதியாக ஏற்றுக்கொண்டார் .1976 இல் கையெழுத்திடப்பட்ட மற்றொரு ஒப்பந்தம், இரு நாட்டு மீனவர்களும் மற்ற நாடுகளின் பிரத்யேக பொருளாதார மண்டலங்களில் மீன்பிடிப்பதைத் தடை செய்தது.

கச்சதீவு ஒப்பந்தப்படி, இந்திய மீனவர்கள் கச்சதீவில் மீன்பிடி வலைகளை உலர்த்திக் கொள்ளலாம் என்றும் அங்குள்ள புனித்அந்தோணியார் கோயில் திருவிழாவில் இந்தியர்கள் பங்கேற்கலாம் என்ற இரண்டு உரிமைகள் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. 1976-ஆம் ஆண்டு கச்சத்தீவு ஒப்பந்தப்படி, மன்னார் வளைகுடா பகுதியில் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க உரிமையில்லைகச்சதீவை இலங்கைக்கு தாரை வார்த்து தரவில்லை என 2013-இல் இந்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் உறுதிமொழி வழங்கியுள்ளது. கச்சத்தீவு ஒப்பந்தம் செல்லாது என தமிழக அரசு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

கச்சதீவின் வரலாறு என்ன?

கச்சதீவு என்பது காலம்காலமாக தமிழர்களின் மீன்பிடி உரிமைப் பகுதி. இலங்கையின் தமிழர்களும் தமிழ்நாட்டு தமிழர்களும் பல்வேறு அரசுகளால் ஆட்சி செய்யப்பட்ட காலத்திலும் தமிழ்நாட்டு மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடித்த பகுதி. ஆங்கிலேயர்கள், போர்துக்கேயர் ஆட்சிக் காலங்களில் கச்சதீவு நிலம் கைமாறியது. இலங்கையில் போர்துக்கேயர் செல்வாக்கு செலுத்திய போது கச்சதீவு அவர்கள் வசம் இருந்தது என்கின்றனர். ஆனால் ராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதி மன்னர்களின் ஆளுகைக்குட்பட்ட ஒரு பகுதியாகவே கச்சதீவு பல நூறாண்டுகளாக இருந்து வந்தது என்பது இந்திய தரப்பின் வாதம் .

கருணாநிதி எதிர்ப்பு

* 1970களில் இலங்கையில் பாகிஸ்தான் விமான தளம் அமைக்க முயன்றது. இதனை இந்தியா மிகக் கடுமையாக எதிர்த்தது. அப்போதுதான் இலங்கை அரசு ஒரு நிபந்தனையை முன்வைத்தது. அதாவது பாகிஸ்தானை விமான தளம் அமைக்க அனுமதிக்காமல் நாங்கள் இருக்கிறோம்; எங்களுக்கு கச்சதீவு வழங்கப்படவேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனை . இந்தநிபந்தனையை அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் ஏற்றுக் கொண்டார்.

* 1974-ம் ஆண்டு ஜூன் 28-ந் தேதி இந்தியாவுக்கு இலங்கை ஜனாதிபதி சிறிமாவோ பண்டாரநாயகே வருகை தந்தார். அப்போது சிறிமாவுக்கும் இந்திராவுக்கும் இடையேயான ஒப்பந்தத்தின் அடிப்படையில் கச்சதீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது. இதற்கு உடனடியாக தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு எதிர்ப்பு தெரிவித்தது.

* 1974-ம் ஆண்டு ஜூன் 29-ந் தேதி தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த திமுக அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியது. அப்போதைய முதல்வர் கருணாநிதி கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுக, காங்கிரஸ், முஸ்லிம் லீக், தமிழரசு கட்சி, பார்வார்டு பிளாக், இடதுசாரிகள் பங்கேற்றனர். இந்த அனைத்துக் கட்சிக் கூட்டமானது இலங்கைக்கு கச்சதீவை தாரை வார்க்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது.

இதேவேளை ,திராவிட முன்னேற்ற கழகம், பிரதமர் மோடியையும் பா.ஜ.க வையும் கடுமையாக சாடி வருகிறது . முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தருமபுரி தடங்கம் கிராமத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “பாசிச மதவெறி கொண்ட பா.ஜ.க. இந்தியா என்ற அழகிய நாட்டை அழித்து விடாமல் தடுக்க ஜனநாயக சத்திகளும் நாட்டு மக்களும் களம் கண்டுள்ள போர் இது. நாம் நடத்தும் இரண்டாவது விடுதலை போராட்டத்திற்கான கட்டியம் கூறும் தேர்தல்

இது. பாசிச மதவெறி கொண்ட பா.ஜ.க. இந்தியா என்ற அழகிய நாட்டை அழிப்பதை தடுக்க தான் ஜனநாயக சக்திகள் ஒன்று திரண்டுள்ளன. ஜனநாயகத்திற்கும், தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கும், எதிர்கால சந்ததியினரை காக்க நீங்கள் வாக்களிக்க வேண்டும். தற்போது நடக்க இருப்பது இந்திய வரலாற்றில் மிக முக்கியமான தேர்தல் ஆகும்.

சமூக நீதிக்கு சவக்குழியை தோண்டும் கட்சி தான் பா.ஜ.க.. சமூக நீதி, சமத்துவம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கக்கூடிய கட்சிதான் பா.ஜ.க. சமூக நீதியை பாதுகாக்க வேண்டும், அரசியல் சட்டம் காப்பாற்றப்பட வேண்டும், பன்முகத்தன்மை கொண்ட நம் நாட்டின் தேசியக் கொடி கம்பீரமாக செங்கோட்டையில் பறக்க வேண்டும் என்றால் பா.ஜ.க. வை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்றார் .இரு தரப்பும் மாறிமாறி ஒன்றின் மேல் ஒன்றை சேற்றைவாரி இறைக்கின்றன . இந்த நிலையில் மக்களின் தீர்ப்பு என்ன என்பதை அறிய நாம் சற்று பொறுத்துதான் இருக்க வேண்டும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.