யாழில் போலி அக்குபஞ்சர் வைத்தியர்… சிகிச்சை நிலையத்திற்கு சென்ற அதிகாரிகள் அதிர்ச்சி!
யாழ்ப்பாண பகுதியில் உள்ள பிறவுண் வீதியில் போலி அக்குபஞ்சர் வைத்தியரால் நடத்தப்பட்டு வந்த சிகிச்சை நிலையத்தை உடனடியாக மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
நேற்றையதினம் குறித்த சிகிச்சை நிலையத்தை யாழ்ப்பாண மாநகரசபை சுகாதார வைத்திய அதிகாரி, உணவு மற்றும் மருந்து பாதுகாப்பு அதிகாரசபை உள்ளிட்ட குழுவினர் ஆய்வு செய்துள்ளார்.
இதன்போது, எந்த பதிவும் மேற்கொள்ளாத சிகிச்சை நிலையமென்பதும், சிகிச்சையளித்தவர் எந்த மருத்துவ தகுதியை கொண்டிருக்காததும் தெரிய வந்ததையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்ற ஒருவர் கடந்த மாதம் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.
அச்சுவேலி, பத்தமேனியை சேர்ந்த ஒருவர் முழங்கால்களில் ஏற்பட்ட வலிக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளார்.
வைத்தியசாலைக்கு செல்லலாமென குடும்பத்தினர் வற்புறுத்திய போதும், உயிரிழந்தவர் அதை பொருட்படுத்தாமல், முகநூல் விளம்பரத்தில் பார்த்த இந்த போலி வைத்தியரிடம் சென்றுள்ளார்.
குறித்த போலி வைத்தியர், அந்த நபரின் இரண்டு முழங்கால்களிலும் ஊசியால் குத்தியுள்ளார். இதனால் கிருமித்தொற்று ஏற்பட்டு, அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்திருந்தார்.
இதனையடுத்து, இந்த போலி வைத்திய நிலையம் நேற்று (5-04-2024) ஆய்வுக்குட்படுத்தப்பட்டது.
குறித்த சிகிச்சை நிலையத்தில் கிசிச்சை அளித்து வந்தவருக்கு ஆங்கில, அக்குபஞ்சர் வைத்தியத்தில் எந்த அங்கீகரிக்கப்பட்ட தகுதியும் இருக்கவில்லையென்பது தெரிய வந்தது.
அவரது சகோதரியின் பெயரில் இந்த சிகிச்சை நிலையத்தை ஆரம்பித்ததும், 2 வருடங்களின் முன்னர் சகோதரி அந்த பதிவை மீள பெற்றதும் தெரிய வந்தது.
மேலும் நேற்றையதினம் ஆய்வு செய்த போது, அங்கு சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஊசிகள் உரிய சுகாதர முறைப்படி சுத்தம் செய்யப்படவில்லையென்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து, அந்த சிகிச்சை நிலையத்தை உடனடியாக மூடுமாறும், தராதரத்தை பூர்த்தி செய்து உரிய பதிவுகளை மேற்கொண்ட பின்னர் மீள திறக்குமாறும் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இதன்போது, அங்கிருந்த போலி வைத்தியர், தான் சிகிச்சையை நிறுத்தினால், தன்னிடம் சிகிச்சை பெறும் 500 இற்கும் மேற்பட்ட நோயாளிகள் இறந்து விடுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.