திருப்பதி கோயிலுக்கு 3 கிலோ தங்க நகையுடன் வந்த நபர் – ஆச்சர்யமாக பார்த்த பக்தர்கள்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மூன்று கிலோ எடையில் தங்க நகைகளை அணிந்துகொண்டு தரிசனம் செய்ய வந்த நபரை பக்தர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.
ஆந்திரப்பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள மங்களகிரியைச் சேர்ந்தவர் சாம்பசிவராவ். தங்க ஆபரணங்களை அணிந்துகொள்வதில் அதீத விருப்பம் கொண்ட அவர், எப்போதும் அதிகஅளவில் ஆபரணங்களை அணிந்துகொண்டு செல்வார். இதனால், நடமாடும் நகைக்கடையாகவே கருதப்படுகிறார்.
இந்நிலையில், திருப்பதி திருமலைக்கு வந்த அவர், ஏராளமான செயின், மோதிரம், பிரேஸ்லெட் என விதவிதமான தங்க நகைகளை அணிந்து வந்தார். மூன்று கிலோ அளவிலான இந்த தங்க ஆபரணங்களை அணிந்தபடியே அவர் ஏழுமலையானை வழிபட்டாார்.
இதனால், அவர் வரிசையில் செல்லத் தொடங்கியது முதல், தரிசனம் முடிந்து திரும்பும் வரை, பொதுமக்கள் அனைவரும் அவரை ஆச்சர்யத்துடன் பார்த்துச் சென்றனர். ஒரு சிலர் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.