புதிய வேலைவாய்ப்பு சட்டம் தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு
புதிய வேலைவாய்ப்பு பாதுகாப்புச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார (Manusha Nanayakkara) தெரிவித்துள்ளார்.
முறைசாரா தொழில் துறைகளில் ஈடுபட்டுள்ள அனைத்து தொழிலாளர்கள் உட்பட தனியார் துறையில் பணிபுரிபவர்கள் அனைவரும் சீரான முறையில் பணியை தொடரும் வகையில் இந்த சட்டம் இருக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அனைத்து ஊழியர்களும் ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் பலன்களை பெறக்கூடியவாறு இச்சட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
தொழிலாளர்களுக்கு சலுகைகள்
ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் இரண்டையும் ஒன்றிணைத்து பொதுவான சமூக பாதுகாப்பு நிதியத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு சலுகைகள் வழங்கப்படும்.
அத்துடன் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சிறப்பு பிரசவகால கொடுப்பனவு வழங்கப்படும். பிரசவ காலத்தின் போது தொழில் வழங்குநர்களுக்கு சுமையை ஏற்படுத்தாத விதத்தில் இவ்விசேட பிரசவகால கொடுப்பனவு கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படவுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.