பெரு குகையில் வேற்று கிரகத்தின் மம்மிகள்? தொல்லியல் ஆய்வாளர்கள் கவலை
பெரு நாட்டின் நாஸ்கா பகுதியில் உள்ள குகை ஒன்றில் நூற்றுக்கணக்கான பழங்கால ஸ்பானிஷ் காலத்திற்கு முந்தைய கலைப்பொருட்கள் மற்றும் விசித்திரமான தோற்றமுடைய மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பெருவில் கண்டுபிடிக்கப்பட்ட மர்மமான குகை
தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள பெரு நாட்டின் நாஸ்கா(Nazca) பகுதியில் குகை ஒன்றில், நூற்றுக்கணக்கான பழங்கால ஸ்பானிஷ் காலத்திற்கு முந்தைய கலைப்பொருட்கள் மற்றும் விசித்திரமான தோற்றமுடைய மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த குகையை லியான்ட்ரோ ரிவேரா என்ற உள்ளூர் விவசாயி தற்செயலாக கண்டுபிடித்தார். இந்த கண்டுபிடிப்பு பற்றிய செய்திகள் விரைவிலேயே பரவி, குறிப்பாக அங்கு கண்டறியப்பட்ட மம்மிகளின் தனித்தன்மை மக்களை அதிகம் கவர்ந்தது.
குறிப்பாக நீண்ட மண்டை ஓடுகளையும், மெலிந்த உடலமைப்பையும் கொண்டிருக்கும் இந்த மம்மிகள் வேற்று கிரகத்தவர் என சிலர் ஊகங்களை தெரிவித்து வருகின்றனர்.
கொள்ளையர்கள் சதித் திட்டம்
தொல்லியல் ஆய்வாளர்கள் இந்த கருத்தை முற்றிலுமாக மறுத்தாலும், இது கல்லறைக் கொள்ளையர்களின் செயல்களுக்கு தூபம் போட்டு விட்டது.
இந்த “வேற்று கிரகத்தவர்” கலைப்பொருட்களை கறுப்பு சந்தையில் விற்பனை செய்து லாபம் ஈட்ட வேண்டும் என்ற நோக்கில், கல்லறைக் கொள்ளையர்களின் செயல்பாடுகள் அதிகரித்து வருகின்றன.
இந்த சட்டவிரோத செயல்கள் மம்மி சடலங்களை மட்டுமல்லாமல், அவற்றைச் சுற்றியுள்ள வரலாற்றுச் சான்றுகளையும் அழித்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தொல்லியல் ஆய்வாளர்கள் கவலை
தொல்லியல் ஆய்வாளர்கள் இந்த இடத்தை பாதுகாத்து, உள்ளே இருக்கும் பொருட்களை முறையாக ஆராய்ச்சி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்த குகை தென் அமெரிக்காவில் வாழ்ந்த, இதுவரை அறியப்படாத நாகரிகம் பற்றிய குறிப்பிடத்தக்க தகவல்களை தன்னுள் கொண்டிருக்கலாம் என அவர்கள் நம்புகின்றனர்.
முறையான அகழ்வாராய்ச்சி மூலம் மம்மி இருந்த காலத்தை கணிப்பதும், கலைப்பொருட்களை ஆய்வு செய்வதும், இந்த தொன்மையான நாகரிகத்தின் ரகசியங்களை வெளிக்கொணர்வதற்கு வழிவகுக்கும் என்று நம்புகின்றனர்.
இந்நிலையில், குகையை பாதுகாப்பதோடு, கல்லறைக் கொள்ளையர்களுக்கு தூபம் போடும் பொருளாதார ஏழ்மை நிலையையும் கையாள வேண்டிய கடினமான சவால்களை பெரு அரசு தற்போது எதிர்கொள்கிறது.