இஸ்ரேலின் கோரத் தாக்குதல்! சுடுகாடாக காட்சியளிக்கும் காசாவின் மிகப்பெரிய மருத்துவமனை
காசாவின் மிகப்பெரிய மருத்துவமனை இஸ்ரேலின் சமீபத்தைய முற்றுகை மற்றும் தாக்குதலால் சாம்பல் மேடாகியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்ததோடு மருத்துவமனை பல உடல்களுடன் வெறும் இடிபாடாக காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
முற்றிலும் அழிவுண்ட நிலையில் காணப்படும் மருத்துவமனைக்கு சென்ற உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணியாளர்கள் அரைகுறையாக புதைக்கப்பட்ட உடல்கள் கைகால்கள் வெளியில் தெரியும் நிலையில் காணப்படுவதை பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அத்தோடு அழுகிய உடல்களின் துர்நாற்றத்தையும் அவர்கள் அவதானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
சுகாதார ஸ்தாபனம்
மருத்துவமனையில் பாரிய அழிவையும் பார்வையிட்டுள்ள சுகாதார ஸ்தாபனத்தின் பணியாளர்கள் முற்றுகையின் போது இஸ்ரேலிய படையினர் மிக மோசமான நிலையில் நோயாளிகளை தடுத்துவைத்திருந்தமை அவர்களில் சிலர் உயிரிழந்தமை குறித்து அறிந்துள்ளனர்.
இரண்டு வாரகால நடவடிக்கையின் பின்னர் கடந்த திங்கட்கிழமை(01) அல்சிபா மருத்துவமனையிலிருந்து இஸ்ரேலிய படையினர் வெளியேறியிருந்தனர்.
இரண்டு வாரங்களாக தாங்கள் மருத்துவமனையின் உள்ளே பாலஸ்தீன தீவிரவாதிகளிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாக அவர்கள் தெரிவித்திருந்தனர்.
மருத்துவமனை
மருத்துவமனைக்குள் செல்வதற்கு பல தடவைகள் முயற்சிகளை மேற்கொண்ட நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை(05) மருத்துவமனைக்குள் சென்றதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
முன்னர் காசாவின் சுகாதார துறையின் முதுகெலும்பாக காணப்பட்ட அல்ஸிபதா மருத்துவமனைக்குள் நாங்கள் சென்றோமென அது தற்போது மனித உடல்களுடன் வெறும் கோதாக காணப்படுகின்றது என உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்டிரோஸ் அதனம் கெப்ரயோசிஸ் குறிப்பிட்டுள்ளார்.
நோயாளிகள்
மேலும் மருத்துவமனையில் நோயாளிகள் எவருமில்லை பல ஆழமற்ற மனித புதைகுழிகள் காணப்படுகின்றன அத்தோடு தீவிர சிகிச்சை பிரிவிற்கு வெளியே அவசரஅவசரமாக அவற்றை தோண்டியுள்ளரெனவும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
மருத்துவமனைக்கு சென்றவேளை ஆகக்குறைந்தது ஐந்து உடல்களாவது அரைகுறையாக புதைக்கப்பட்ட நிலையில் காணப்படுவதை அவதானித்தோமென ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.
அத்தோடு மருத்துவமனை முற்றாக அழிந்த நிலையில் காணப்படுவதோடு உடல்களின் துர்வாசனை வீசுவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் அவசர சூழ்நிலைகளிற்கான குழுவின் தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.