கமல்ஹாசன் மூளையை மனநல மருத்துவமனையில் பரிசோதிக்க வேண்டும்.., அண்ணாமலை விமர்சனம்
கமல் ஹாசன் மூளையை மருத்துவமனையில் பரிசோதிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
கமல் பேசியது..
வரும் மக்களவை தேர்தலில் ஸ்ரீபெரும்புத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து நடிகரும், மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல் ஹாசன் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், “பாஜகவின் கற்பனைப்படி இந்தியாவின் தலைநகராக நாக்பூரை மாற்ற வேண்டும். இந்தியா மத சார்புள்ள, ஒரே மதம் உள்ள நாடாக வேண்டும். இந்திமொழி ஆட்சி மொழியாக இருக்க வேண்டும்.
அனைத்து தொழில்களும் சிறு குழுவிற்கே சேர வேண்டும். பாடத்திட்டத்தில் புராணம் வர வேண்டும் என்பது தான். இதுவெல்லாம் நடந்தால் நாம் தெருவில் நிற்க வேண்டியது தான். அதை நாம் நடக்க விடக்கூடாது” என்றார்.
அண்ணாமலை பேசியது..
இதுகுறித்து கோவையில் பாஜக வேட்பாளர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “கமல் ஹாசனை மனநல மருத்துவமனையில் பரிசோதிக்க வேண்டும். அவரது இரு மூளையையும் சோதனை செய்ய வேண்டும்.
சுயநினைவுடன் தான் இருக்கிறார்களா, சரியா சாப்பிடுகிறார்களா என்று மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.
இந்தியாவின் தலைநகரை எப்படி நாக்பூருக்கு மாற்ற முடியும். அவர் இதை சுயநினைவுடன் தான் பேசுகிறாரா அல்லது திமுகவிடம் ராஜ்யசபா சீட்டை பெறுவதற்கு கட்சியை விற்பதற்காக பேசுகிறாரா?” என்றார்.