நாவலப்பிட்டியில் அரச பேருந்து விபத்து : பலர் காயம்
நாவலப்பிட்டி, உடுவெல்ல பிரதேசத்தில் தொலஸ்பாக பிரதான வீதியில் அரசு பாடசாலை பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து இன்று (09.04.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது பேருந்தில் பயணித்த மூன்று பாடசாலை மாணவர்கள், ஐந்து பயணிகள் மற்றும் பேருந்து சாரதி ஆகியோர் காயமடைந்து நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேருந்தின் முன்பகுதியில் இருந்து பெரும் சத்தம் கேட்டதயடுத்து முன்பக்க சில்லுகளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பேருந்து கட்டுப்பாட்டை இழந்துள்ளது.
தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து
இதன்போது துரிதமாக செயற்பட்ட பேருந்தின் சாரதி பேருந்தை அருகிலுள்ள மலை மீது மோதி நிறுத்தியதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பேருந்து பயணித்த வீதியின் மறுபுறம் 300 மீற்றர் உயரமான செங்குத்தான சரிவு இருந்ததுடன் சாரதி பேருந்தை சரிவின் பக்கம் செலுத்தாமல் அதற்கு எதிர்ப்பக்கம் செலுத்தி மலைமீது மோதியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
விபத்து நேரிட்ட போது பேருந்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 50 பேர் பயணம் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பேருந்தானது சேவையில் இருந்து நீக்கப்பட்டு, பின்னர் பழுது பார்க்கப்பட்டு மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக நாவலப்பிட்டி டிப்போ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.