யாழில். தனது சிகிச்சை நிலையத்தை தடை செய்ய ஆங்கில வைத்தியர்கள் முயற்சி என அக்குபஞ்சர் வைத்தியர் குற்றச்சாட்டு
யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் தனது சுரபி அக்குபஞ்சர் சிகிச்சை நிலையத்தை தடை செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அதற்கு எதிராக ஜனாதிபதியிடம் முறையிடவுள்ளதாகவும் , அக்குபஞ்சர் வைத்தியர் கே. டினேஸ் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
எமது சிகிச்சைக்காக வந்த ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு உரிய சிகிச்சைகள் வழங்காததால் , அவரின் காலில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. அதற்காக சத்திர சிகிச்சை செய்துள்ளார்கள். அதற்கான ஆதாரங்களை உயிரிழந்தவரின் மனைவி என்னிடம் சமர்ப்பித்துள்ளார்.
சுயநினைவுடன் , நடமாட கூடிய நிலையில் இருந்தவர் அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்ற பின்னர் உயிரிழந்த நிலையில் சடலமாகவே உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் 24 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு உயிரிழந்த நபர் , என்னிடம் சிகிச்சை பெற்றதால் தான் உயிரிழந்தார் என ஊடகங்களுக்கு செய்திகளை வழங்கியுள்ளனர்.
எமது சிகிச்சை நிலையத்தை தொழிற்படாது செய்வதற்கான சதி நடவடிக்கையாகவே நான் இதனை பார்க்கிறேன். எங்களின் சிகிச்சை நிலையத்தில் அவர் உயிரிழக்கவில்லை.
எங்களின் அக்குபஞ்சர் சிகிச்சை மூலம் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை. அவற்றை உரிய சுகாதார முறைப்படியே கையாள்கிறோம். அவ்வாறு இருக்க காய்ச்சல் வந்த ஒருவருக்கு எமது சிகிச்சையால் தான் காய்ச்சல் வந்தது என கூறுகின்றார்கள்.
நாங்கள் ஏற்கனவே மருந்தில்லாத சிகிச்சைகளையே முன்னெடுக்கிறோம் அதன் ஊடாக பெருமளவான நோயாளர்களை குணம் ஆக்கியுள்ளேன். அவ்வாறு குணமானவர்கள் ஆங்கில மருத்துவர்களால் முடியாது என கைவிடப்பட்டவர்களே அதிகம். அவை சில ஆங்கில வைத்தியர்களின் தனிப்பட்ட வருமானத்தை பாதிக்கும் என்பதால், தான் எனது சிகிச்சை நிலையத்தை தடை செய்ய முயல்கின்றனர்.
அக்குபஞ்சர் சிகிச்சை முறையில் எந்தவிதமான மருந்துகளும் இல்லாமல் நோய்களை நாம் குணப்படுத்துவதால் , மருந்துகளை வழங்கி சிகிச்சை வழங்குபவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதால் தான் தவறான முறையில் எமது சிகிச்சையை விமர்ச்சிக்கின்றனர்.
இலங்கையில் யானைகளை பழக்கப்படுத்தி வெளிநாடுகளுக்கு அனுப்பும் முறை நீண்ட காலமாக இருக்கிறது. அது யானைகளின் அக்குபஞ்சர் இடங்களை அடையாளம் கண்டு அங்குசத்தால் குத்தி அதனை வைத்து , வேலை வாங்க முடிகிறது. அக்குபஞ்சர் முறை என்பது இலங்கையை பொறுத்தவரை கற்கால காலத்தில் இருந்தே இருக்கிறது. இலங்கையில் தோன்றிய ஒரு மருத்துவம்.
இலங்கைக்கு வந்த சீன வணிகர்கள் , இலங்கையில் இருந்த அக்குபஞ்சர் முறைகளை கற்று , தனது நாட்டில் சிகிச்சை அளித்தனர். இன்று அக்குபஞ்சர் சீன மருத்துவம் என்கிறார்கள். அது தவறு. அது இலங்கை மருத்துவம். அவ்வாறான மருத்துவத்தை இலங்கையில் உள்ள ஆங்கில மருத்துவர்கள் தவறான மருத்துவம் என்கிறார்கள்.
எனது மருத்துவ சிகிச்சை நிலையத்தை நான் உரிய முறையில் பதிவு செய்தே நடாத்தி வருகிறேன். தகுதியான கல்வி தகமையுடனே சிகிச்சை வழங்கி வருகிறேன். எனது சிகிச்சையால் யாரும் உயிரிழக்கவில்லை.
எமது சிகிச்சை நிலையத்திற்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் வடமாகாண ஆளுநர் ஊடாக ஜனாதிபதியிடம் முறையிடவுள்ளோம் என தெரிவித்தார்.