அதிபர் தேர்தல் : புதிய சின்னத்தில் களமிறங்குகிறார் ரணில்
தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க, யானை அல்லது மொட்டு அல்லாமல் முற்றிலும் புதிய சின்னத்தில் அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என அதிபரின் சிரேஷ்ட ஆலோசகரும், ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட தலைவருமான பேராசிரியர் ஆஷு மாரசிங்க தெரிவித்துள்ளார்.
அதிபர் விக்ரமசிங்க தேசிய வேட்பாளராக பல கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்துவார் என பேராசிரியர் மாரசிங்க ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
யானை,மொட்டுவில் போட்டியிட்டால் சிக்கல்
“அதிபர் தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிட்டால் அவருக்கு ஆதரவளிப்பதில் அவர் உட்பட பலருக்கு பிரச்சினை இருப்பதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க போன்றவர்கள் கூறியுள்ளனர். அதேபோன்று, அவர் மொட்டுவின் கீழ் போட்டியிடுவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள எமக்கும் பிரச்சினை உள்ளது. எனவே விக்ரமசிங்க புதிய சின்னத்தில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது,” என்றார்.
அடுத்த அதிபர் தேர்தலில் 80வீதத்திற்கும் அதிகமான ஐக்கியமக்கள் சக்தியினர் (SJB) விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பர் என அவர் கூறினார். “ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகிய இரண்டும் ஒன்றிணைய வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள முன்வைத்துள்ள பிரேரணையை நாங்கள் வரவேற்கிறோம்.
சஜித் எதிர்த்தாலும் ரணிலுக்கு ஆதரவளிக்கும் ஐக்கிய மக்கள் சக்தி
ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச அத்தகைய நடவடிக்கைக்கு எதிராக முடிவெடுத்தாலும், ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள மற்றவர்கள் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம், ”என்று அவர் கூறினார்.
அரசியலமைப்பின் பிரகாரம் அதிபர் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் இரண்டையும் ஒரே நாளில் நடத்த முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கையின் பொருளாதாரம் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ள வெளிநாட்டு கையிருப்புடன் மீண்டு வரத் தொடங்கியுள்ளதாகவும், அதேவேளையில் சுற்றுலாத்துறை இந்த வருடத்தில் எதிர்பாராத இலாபத்தை அடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.