மன்னிப்பை ஏற்க முடியாது: ராம் தேவ் வழக்கில் உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு
புது தில்லி: பதஞ்சலி விளம்பர விவகாரத்தில், யோகா குரு ராம்தேவ், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குநா் ஆச்சாா்ய பாலகிருஷ்ணா ஆகியோா் உச்சநீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியிருந்த நிலையில், அதனை ஏற்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுத்துவிட்டது.
நாங்கள் குருடர்கள் அல்ல என்று குறிப்பிட்டிருக்கும் நீதிமன்றம், இது குறித்து மத்திய அரசு அளித்த பதிலிலும் திருப்தியில்லை என்றும் தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் தாங்கள் ஏற்கெனவே அளித்த உறுதிமொழியை மீறியதற்காக, யோகா குரு ராம்தேவ், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குநா் ஆச்சாா்ய பாலகிருஷ்ணா இருவரும் மன்னிப்புக் கோரியிருந்தனர்.
பதஞ்சலி நிறுவனத்தின் ஆயுா்வேத தயாரிப்புகள், நவீன மருத்துவ முறைகளால் குணப்படுத்த முடியாத நோய்களை குணப்படுத்தும் என்றுகூறி அந்த நிறுவனத்தால் வெளியிடப்பட்ட விளம்பரத்தை எதிா்த்து, இந்திய மருத்துவச் சங்கம் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை கடந்த ஆண்டு நவம்பரில் விசாரித்த உச்சநீதிமன்றம், தவறான விளம்பரங்கள் குறித்து பதஞ்சலி நிறுவனத்தை எச்சரித்தது.
இதையடுத்து, ‘பதஞ்சலி நிறுவனத்தின் ஆயுா்வேத பொருள்கள் குறித்து எந்தவொரு தவறான விளம்பரங்களும் அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் இனி வெளியிடப்படாது’ என்று அந்த நிறுவனம் சாா்பில் ஆஜாரன வழக்குரைஞா் உறுதியளித்தாா். எனினும், சா்ச்சைக்குரிய விளம்பரங்கள் தொடா்ந்து வெளியிட்டு வந்தன.
இந்த விவகாரம் தொடா்பாக கடந்த பிப்ரவரியில் நடந்த விசாரணைபோது, பதஞ்சலி நிறுவனம் மீது உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்தது. ‘ஏற்கெனவே அளித்த உறுதிமொழியை மீறியதற்காக, பதஞ்சலி நிறுவனத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏன் தொடரக் கூடாது?’ என்று நீதிபதிகள் கேள்வியெழுப்பினா்.
இதனிடையே, இந்த விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் இருவரும் அண்மையில் மன்னிப்புக் கோரியிருந்தனா். ஆனால், அது வெறும் வாய் வாா்த்தையாக உள்ளது என்று குறிப்பிட்ட நீதிமன்றம், மன்னிப்பை நிராகரிப்பதாக தெரிவித்தது.
இந்தச் சூழலில், யோகா குரு ராம்தேவ் மற்றும் பதஞ்சலி மேலாண் இயக்குநா் பாலகிருஷ்ணா ஆகியோா் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் புதிதாக தனித்தனியே பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
‘ஏற்கெனவே அளித்த உறுதிமொழியை மீறி, பதஞ்சலி நிறுவனம் சாா்பில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன்; இந்த தவறுக்காக மிக வருந்துகிறேன். எதிா்காலத்தில் இதுபோல் நிகழாதென உறுதியளிக்கிறேன். நீதிமன்ற உத்தரவை மீறும் எந்த உள்நோக்கமும் எனக்கு இல்லை’ என்று ராம்தேவ் குறிப்பிட்டிருந்தார். இவ்வழக்கில் புதன்கிழமை மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது, ராம்தேவ் உள்ளிட்டோரின் மன்னிப்பை ஏற்க மீண்டும் உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.