;
Athirady Tamil News

கோடை கால திடீர் உயிரிழப்புகள்: ஆய்வு செய்ய சுகாதாரத் துறை உத்தரவு

0

சென்னை: கோடை காலத்தில் திடீரென நேரிடும் உயிரிழப்புகளை ஆய்வுக்குட்படுத்துமாறும், அதுகுறித்த விவரங்களை அரசுக்கு தெரியப்படுத்துமாறும் மருத்துவமனைகளுக்கு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது:

தமிழகத்தில் கோடையின் தாக்கம் கடந்த சில நாள்களாக தீவிரமாக உள்ளது. இந்த காலகட்டத்தில் நேரடியாக வெயிலில் பணியாற்றுவோர் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். குறிப்பாக சாலையோர வியாபாரிகள், கட்டடத் தொழிலாளர்கள், நூறு நாள் ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள், சுரங்கத் தொழிலாளர்கள், பேருந்து நடத்துநர் மற்றும் ஓட்டுநர்கள் மிக கவனமுடன் இருக்க வேண்டும்.

அதுமட்டுமல்லாது, விவசாயிகள், உணவு விநியோக சேவை மேற்கொள்பவர்கள், டெலிவரி பணியில் உள்ளவர்கள், காவல்துறையினர், தீயணைப்பு பணியாளர்கள், போக்குவரத்து போலீஸார் உள்ளிட்டோரும் வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும்.

குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள், இணை நோயாளிகள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். வழக்கத்தைக் காட்டிலும் அதிகமாக தண்ணீர் அருந்துதல் அவசியம். உப்பு-சர்க்கரை கரைசலும் தேவைப்படும்போது பருகலாம்.

தமிழகத்தில், கோடையின் தாக்கத்தால் திடீரென நேரிடும் உயிரிழப்புக்கான காரணம் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும், அதுகுறித்த விவரங்களை அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அவசர மருத்துவ உதவிக்கும், ஆலோசனைகளுக்கும் 104 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.