பொன்னாவெளியில் குடியேற விரும்புவோருக்கு வீட்டு திட்டம் வழங்க தயார்
பொன்னாவெளியில் யாரேனும் குடியேற விரும்பின் அவர்களுக்கான வீட்டு திட்டங்களை வழங்கி அவர்களை அங்கு குடியேற்ற நடவடிக்கை எடுக்க தயார் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
பொன்னாவெளியில், மக்கள் குடியிருப்பே இல்லை. அவர்கள் அங்கிருந்து எப்போவோ வெளியேறிவிட்டனர். யுத்த காலத்திற்கு முன்னரே பொன்னாவெளி பகுதியில் வசிக்க முடியாத சூழ் நிலையில் அங்கிருந்து வெளியேறி விட்டனர்.
ஆனால் தற்போது சிலர் , யுத்த காலத்தில் இடம்பெயர்ந்த மக்களை மீள் குடியேற அனுமதிக்கவில்லை. வேறு ஊரில் குடியேறினால் தான் வீட்டு திட்டம் வழங்க முடியும் என அங்கிருந்த மக்களை வேறு கிராமங்களில் குடியேற்றியதாக தெரிவிக்கின்றனர். அது முற்றிலும் பொய்.
அந்த பகுதி இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலையே , இராணுவத்தினரோ குடியிருக்கவில்லை. அவ்வாறு இருக்க யார் அவர்களை அங்கு குடியேற வேண்டாம் என தடுக்க முடியும் ? அங்குள்ள காணிகள் தனி நபருக்கு சொந்தமான உறுதி காணிகள். அவ்வாறு இருக்க அவர்களின் காணிகளில் குடியிருக்க வேண்டாம் என யாரால் தடுக்க முடியும்.
தமது காணிகளில் தாம் நிரந்தரமாக குடியிருக்க போகிறோம் என யாராவது முன் வந்தால் அவர்களுக்கு வீட்டு திட்டங்களை பெற்றுக்கொடுக்க என்னால் நடவடிக்கை எடுக்க முடியும்.
சுண்ணக்கல் அகழ்வினால் ஏற்படும் பள்ளமான நிலப்பரப்புக்களில், குளத்தை உருவாக்கி நீரை சேகரித்து வயல் காணிகளுக்கு நீர் வழங்கலாம்.அத்துடன் அந்த குளத்தில் மீன் வளர்க்க முடியும். அதுமட்டுமன்றி குளத்தில் நன்னீரை சேகரிப்பதன் ஊடாக அயல் கிராமங்களின் நிலத்தடி நீரினையும் பாதுகாக்க முடியும்.
அதேவேளை அப்பகுதியில் கடலை அண்மித்த பகுதிகளில் தடுப்பணைகளை கட்டி தருவதாக டோக்கியா நிறுவனம் உறுதி அளித்துள்ளனர். அதனூடாக மழை நீரை கடலுடன் கலக்காம பாதுகாக்க முடியும். நன்னீரை தேக்க முடியும்.
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை தூசுகளால் தான் கூவில் கள்ளு ருசியாக இருந்தது என சொல்வார்கள். காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை இயங்கிய போதே தொழிற்சாலையை சுற்றி மக்கள் குடியிருப்பு காணப்பட்டன. அவர்களுக்கு தூசியால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லையே.. இப்ப நவீன தொழினுட்ப வளர்ச்சி காரணமாக தூசி இல்லாம செய்ய முடியும்.
எனவே பொன்னாவெளி பகுதியில் சுற்று சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்பாடாது என ஆய்வறிக்கை கிடைத்தால் , அடுத்த கட்ட பணிகளை அசுர வேகத்தில் முன்னோடுப்போம்.
தொழிற்சாலை வந்தால் ,வேலை வாய்ப்புக்கள் மாத்திரமின்றி , அபிவிருத்திகளும் அங்கும் இடம்பெறும். எனவே மக்களுக்காக தொடர்ந்து நான் பணியாற்றுவேன் என தெரிவித்தார்.