மிகவும் ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இணைத்துள்ள ஆசியநாடு
ஐக்கிய இராச்சியத்தின் வெளிநாட்டு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் (FCDO) பிரித்தானியா குடிமக்கள் பயணிக்க ‘மிகவும் ஆபத்தான’ நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தானையும் இணைத்துள்ளது.
குற்றம், போர், பயங்கரவாதம், நோய், வானிலை, இயற்கைப் பேரழிவுகள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பிற்கு ஏற்படும் பிற அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட சாத்தியமான அபாயங்களின் அடிப்படையில் இந்த பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தினால் தடை செய்யப்பட்ட மொத்த இடங்களின் எண்ணிக்கை 24 ஆக உள்ளது. ரஷ்யா, உக்ரைன், இஸ்ரேல், ஈரான், சூடான், லெபனான், பெலாரஸ் மற்றும் பாலஸ்தீனப் பகுதிகள் இந்தப் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்ட நாடுகளாகும்.
ஆபத்தான நாடுகளின் பட்டியல்
ஆப்கானிஸ்தான், புர்கினா பாசோ, மத்திய ஆப்பிரிக்க குடியரசு, சாட், ஹைட்டி, ஈராக், இஸ்ரேல், லெபனான், லிபியா, மாலி, நைஜர், வட கொரியா, சோமாலியா, தெற்கு சூடான், சிரியா, வெனிசுலா மற்றும் ஏமன் ஆகிய நாடுகள் தடுப்புப்பட்டியலில் காணப்படுகின்றன.
தற்போது வெளியுறவு அலுவலகம் சிவப்பு பட்டியலை வெளியிட்டுள்ளது.சிவப்புப் பட்டியலில் உள்ள நாடுகள் பயணத்தைத் தவிர்க்க வேண்டிய பகுதிகளைக் குறிக்கின்றன. இந்தப் பட்டியலில் பாகிஸ்தானும் இடம்பெற்றுள்ளது.
பாகிஸ்தானில் 2023 ஆம் ஆண்டில் 789 பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் 1,524 வன்முறை தொடர்பான இறப்புகள் மற்றும் 1,463 பேர் காயம் அடைந்துள்ளனர் என்று பாகிஸ்தான் செய்தி இணையதளமொன்று அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வன்முறையின் மையப்புள்ளி
கைபர் பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தான் மாகாணங்கள் வன்முறையின் முக்கிய மையப் புள்ளிகளாக உருவெடுத்துள்ளன. மேலும், மதவெறி வன்முறைகளும் கவலையளிக்கும் வகையில் அதிகரித்துள்ளன.
2023 ஆம் ஆண்டில், மத சமூகங்கள் மற்றும் அவர்களின் வழிபாட்டுத் தலங்களை குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதச் செயல்களால் 203 உயிர்கள் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.