வெளிநாட்டில் மரண தண்டனையில் இருந்து மீட்க… ரூ 34 கோடி திரட்டிய கேரள மக்கள்
சவுதி அரேபியாவில் கொலை வழக்கில் சிக்கி மரண தனடனையை எதிர்கொள்ளும் நபரை மீட்க கேரள மக்கள் ரூ 34 கோடி திரட்டியுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கொலை செய்த வழக்கில்
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரஹீம். கடந்த 2006ல் சவுதி அரேபிய சிறுவனை கொலை செய்த வழக்கில் 18 ஆண்டுகளாக சிறையில் உள்ளார்.
இந்த நிலையில் அப்துல் ரஹீமை சிறையில் இருந்து மீட்கும் வகையில் 5 நாட்களுக்கு முன்னர் அமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ள கேரள மக்கள், நிதி திரட்டும் பணியை முன்னெடுத்துள்ளனர்.
ஆனால், உலகமெங்கிலும் உள்ள கேரள மக்கள் தாராளமாக நிதியுதவி அளிக்க முன்வந்ததாக நிர்வாகிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளனர். உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ள தகவலின் அடிப்படையில்,
சவுதி அரேபியாவில் ஊனமுற்ற சிறுவனை ரஹீம் கவனித்து வந்துள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக அந்த சிறுவனின் மரணத்திற்கு ரஹீம் காரணமாகியுள்ளார். இந்த வழக்கில் கைதான ரஹீம் 2006 முதல் சவுதி அரேபியாவில் சிறையில் உள்ளார்.
அவர் மீதான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், சவுதி சிறுவனின் குடும்பத்தினர் பொதுமன்னிப்பு வழங்க மறுத்ததை அடுத்து ரஹீமுக்கு 2018ல் மரண தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், மரண தண்டனைக்கு எதிரான மேல்முறையீடும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
ரூ 34 கோடி திரட்டியுள்ளதாக
இந்த நிலையில் குறிப்பிட்ட தொகையை இழப்பீடாக வழங்க முன்வந்தால், ரஹீமுக்கு மன்னிப்பு வழங்க தாங்கள் தயாரென அந்த சிறுவனின் குடும்பம் ஒப்புக்கொண்டுள்ளது.
இதனையடுத்து, ரியாத்தில் செயல்பட்டுவரும் 75க்கும் மேற்பட்ட அமைப்புகள், சில தொழிலதிபர்கள், அரசியல் கட்சிகள், பொதுமக்கள் என அனைவரும் நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளனர்.
இதனையடுத்து ஒரே வாரத்தில் ரூ 34 கோடி திரட்டியுள்ளதாக நிர்வாகிகள் குழு அறிவித்துள்ளது. சவுதி அரேபிய குடும்பம் கோரியுள்ள 15 மில்லியன் சவுதி ரியால் தொகையை எட்டியுள்ளதாகவும், மிக விரைவில் சவுதி அரேபிய குடும்பத்தினரிடம் அந்த தொகையானது ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இழப்பீடு பெற்றுக்கொண்டு ரஹீமுக்கு மன்னிப்பு வழங்க சவுதி குடும்பம் ஒப்புக்கொண்டதை அடுத்து, தண்டனை நிறைவேற்றுவதை நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.