;
Athirady Tamil News

சித்திரைப் புத்தாண்டில் இருந்தாவது தமிழரசுக் கட்சி ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும்: சி.வி.கே வேண்டுகோள்

0

இலங்கைத் தமிழரசுக் கட்சியினராகிய நாம், சித்திரைப் புத்தாண்டில் இருந்தாவது பேதங்களைக் களைந்து நபர்களாகவோ, கூட்டாகவோ, அணிகளாகவோ நின்று பேசுவதைத் தவிர்த்துக் குறிப்பாக அணிகள் என்ற நிலையைத் தவிர்த்து கட்சி என்ற ஒரு பொதுச் சிந்தனையில் வந்து ஒற்றுமையாக ஒரே கட்சியாகச் செயற்படுவோம் என்று சபதம் எடுக்க வேண்டும்.

அதற்கான செயற்பாடுகளில் யாவரும் ஈடுபட வேண்டும் என்றும் விநயமாகக் கேட்டுக்கொள்கின்றேன் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம்(C. V. K. Sivagnanam) கட்சி உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, “தமிழ் மக்களின் அடையாளமாக இருந்து வருகின்ற எங்களுடைய தமிழரசுக் கட்சி இப்போது நீதிமன்றத்தில் வந்து நிற்கின்றது.

இடைக்காலத் தடை
இதனால் எமது கட்சியின் புதிய பதவி நிலைகளுக்கு நீதிமன்றம் தற்போது இடைக்காலத் தடை விதித்திருக்கின்றது. இது மிகவும் வருந்தத்தக்க ஒரு விடயம். இது ஒரு சிவில் வழக்கு என்பதால் நீண்ட காலத்திற்குப் போகக்கூடிய ஆபத்தும் இருக்கின்றது.

இந்த விடயத்தை சுமுகமாகத் தீர்க்க வேண்டும் என்று கட்சியின் மூத்த ஓர் உறுப்பினராக எங்களுடைய கட்சிக்காரர்களிடம் ஒரு விண்ணப்பத்தை நான் முன்வைக்கின்றேன்.

ஏனெனில் குறிப்பாக இந்த வழக்கில் – தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில் யாரும் இடைபுகு வாய்ப்பும் ஏற்பாடுகளும் அந்தச் சட்ட கோவையில் இருக்கின்றன.

அந்த அடிப்படையில் எங்களுடைய கட்சி உறுப்பினர் ஒருவர் ஏற்கனவே அந்த இடைபுகு மனுவையும் தாக்கல் செய்திருக்கின்றார். இவ்வாறு எல்லாம் தொடர்ந்தால் இந்த வழக்கு நீண்டு செல்கின்ற சூழல் ஏற்படும்.

இவ்வாறான நிலைமையில் தேர்தல் ஒன்று வருகின்றபோது எங்களுடைய கட்சி ஒரு பலவீனமான நிலையிலே செயற்பாடற்ற இயங்கு நிலை இல்லாத ஒரு கட்சியாக இருக்கக்கூடிய சூழல் உருவாகின்றது.

கட்சியின் யாப்பு
ஆகையினால் இவையெல்லாம் தவிர்க்கப்பட வேண்டும். கட்சியை உடனடியாக இயங்கு நிலைக்குக் கொண்டு வர வேண்டும் என்றால் எங்களுக்கு இடையே இருக்கின்ற கருத்து வேறுபாடுகளை மறந்து நாங்கள் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்கின்றமையை விடுத்து அதாவது பரஸ்பர குற்றச்சாட்டைத் தவிர்த்து ஒரு ஒற்றுமையான நிலைக்கு வந்து இந்தக் கட்சியை முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும்.

எங்களுடைய கட்சியின் யாப்பு ஒரு முறைப்படியான யாப்பு. அந்த யாப்பில் கடந்த காலங்களில் சில திருத்தங்கள் செய்திருந்தாலும் அந்தத் திருத்தங்கள் செய்யப்பட்ட அடிப்படையில் அதற்கான திருத்தப்பட்ட யாப்புக்களும் இருக்கின்றன.

இவ்வாறு இருந்தும் பல விடயங்கள் அன்றைக்கு முறைப்படியாக நடைபெறவில்லை என்பது எனக்கும் தெரியும். இருந்தும் அவற்றையெல்லாம் பேசாமல் நான் மௌனம் காத்தமைக்கு ஒரே ஒரு காரணம் எப்படியாவது இந்தப் பொதுச் சபைக் கூட்டங்களை முடித்து தேசிய மாநாட்டை நடத்தியே ஆகவேண்டும் என்பதுதான்.

அதுதான் என்னுடைய சிந்தனையாகவும் இருந்தது. அதனால்தான் நான் குறைகளைச் சொல்லவில்லை. கட்சிக்குள் உள்ள குறைபாடுகள் எனக்குத் தெரியும். ஆகவே, என்னைப் பொருத்தவரையில் நாங்கள் எல்லாவற்றையும் மறந்து குறிப்பாக பிரதேசவாதம், தனிப்பட்ட நபர், குற்றச்சாட்டுக்கள், வசைபாடுதல்கள் என சகலதையும் மறந்து முரண்பாடுகள் எதுவும் இல்லாமல் கட்சி என்ற ஒன்றை மையப்படுத்திச் சிந்தித்துச் செயற்பட வேண்டும்.

கட்சிகளில் ஏற்பட்டுள்ள பிளவுகள்
இதனூடாக இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு கட்சியை இயங்கு நிலைக்குக் கொண்டு வர வேண்டும். ஏனென்றால் இப்போதைய நிலையில் தெற்கத்தேய சக்திகள் கூட எங்களுடைய பிளவுகளைச் சாதகமாகப் பயன்படுத்தி ஊடுருவக்கூடிய வாய்ப்புகளும் இருக்கின்றன.

ஆகவே, அதையும் புரிந்துகொண்டு செயற்பட வேண்டியது அவசியம். கட்சியின் பாரம்பரிய யாப்பில் சில பிழைகள் இருக்கத்தான் செய்கின்றன. அவை அனைத்தையும் புரிந்துகொண்டு தற்போதைய நிலைமையையும் புரிந்துகொண்டு செயற்பட வேண்டும்.

குறிப்பாக யாப்பில் சில பிழைகள் இருக்கின்றன. அவற்றை நாங்கள் பேசித் தீர்க்கலாம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. ஆகவே, நாங்கள் கூடிப் பேசுவோம். இப்போது கட்சியை நீதிமன்றத்திலே வைத்துக் கொண்டு கட்சியை நீதிமன்றம் கட்டுப்படுத்துகின்ற நிலைமை இருக்கின்றது.

ஆகவே, அதிலிருந்து நாங்கள் விடுவித்துக் கொண்டு கட்சியை முன்னோக்கிக் கொண்டு பயணிப்போம். எங்களுடைய கட்சி உறுப்பினர்கள் பேதங்களைத் தவிர்த்து பேதங்களை மறந்து ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.