அமெரிக்காவில் விபத்துக்குள்ளான கப்பல்! குற்றவியல் விசாரணைகள் ஆரம்பம்
அமெரிக்காவில் அண்மையில் விபத்துக்குள்ளான கப்பல் தொடர்பான குற்றவியல் விசாரணையை அமெரிக்காவின் புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகம் (US Federal Bureau of Investigation) ஆரம்பித்துள்ளது.
இலங்கை நோக்கி பயணித்த சிங்கப்பூர் கப்பல் விபத்துக்குள்ளாகி ஆறு பேர் உயிரிழந்துள்ள நிலையிலேயே, தற்போது குறித்த விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.
விபத்து
அமெரிக்காவின் மேரிலேண்ட் மாநிலத்தில் பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்துடன் மோதி சிங்கப்பூர் கப்பலொன்று கடந்த மாதம் விபத்துக்குள்ளாகியிருந்தது.
இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபை ஏற்கனவே ஆரம்பித்துள்ள நிலையில், குறித்த கப்பலில் உள்ள எவரும் விசாரணைகள் நிறைவடையும் வரை வெளியேற முடியாதென தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது அமெரிக்காவின் புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகம் குறித்த விபத்து தொடர்பான குற்றவியல் விசாரணையை ஆரம்பித்துள்ளது.
குற்றவியல் விசாரணை
சிங்கப்பூரில் இருந்து குறித்த கப்பல் பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் இயந்திர கோளாறுகள் இருந்தமை தொடர்பில் கப்பலில் இருந்தவர்கள் அறிந்திருந்தார்களா எனும் கோணத்தில் அந்த பணியகத்தின் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
எவ்வாறாயினும், இந்த குற்றவியல் விசாரணைகள் தொடர்பான எந்தவொரு மேலதிக தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.