ரயில் டிக்கெட் பரிசோதகருடன் தகராறு – ஆத்திரத்தில் பெண் பயணி செய்த காரியம்!
ரயில் டிக்கெட் பரிசோதகரின் கையை பெண் பயணி ஒருவர் கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிக்கெட் பரிசோதனை
மும்பையிலிருந்து ஏ.சி மின்சார ரயில் ஒன்று விரார் நோக்கி சென்றது. இந்த ரயிலின் ஒரு பெட்டியில் அதிரா சுரேந்திரநாத் (26) என்ற பெண் டிக்கெட் பரிசோதகர், பயணிகளிடம் சோதனை மேற்கொண்டார்.
அப்போது சிங் என்ற பெண் பயணியிடம், டிக்கெட் பரிசோதகர் டிக்கெட் கேட்டார். அந்த பெண் பயணி தனது கணவர் வாட்ஸ்அப்பில் அனுப்பிய டிக்கெட்டை காண்பித்தார். ஆனால் அந்த டிக்கெட் செல்லுபடியாகாது என்று டிக்கெட் பரிசோதகள் தெரிவித்துள்ளார். மேலும், அந்த பெண் பயணியை மிராரோடு ரயில் நிலையத்தில் இறங்குமாறு தெரிவித்தார்.
வெறிச்செயல்
இதனால் இருவருக்கும் இடையில் வாய் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பெண் பயணி ரயில் நிலையம் வந்ததும் டிக்கெட் பரிசோதகரின் கையை கடித்து விட்டு தப்பிக்க முயன்றார்.
அப்போது டிக்கெட் பரிசோதகர் அதிரா சுரேந்திரநாத் சத்தம் எழுப்பியதை அடுத்து மற்ற பயணிகள் அந்த பெண்ணை பிடித்து ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பெண் பயணி மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், காயமடைந்த டிக்கெட் பரிசோதகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.