இலங்கையில் பாரியளவில் அதிகரித்துள்ள பெட்ரோலின் விலை : 130 இலிருந்து 360 ரூபாவாக மாற்றம்
கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் எரிபொருளின் விலை கடுமையாக உயர்வடைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா(Harshana Rajakaruna) தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவு
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் இன்று எமது வாழ்க்கைச் செலவு கடுமையாக அதிகரித்துள்ளதை நாங்கள் இப்போது காண்கின்றோம்.
2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் பொழுது இன்று எரிபொருட்களின் விலை பாரியளவில் உயர்வடைந்துள்ளது. டிசம்பர் 31ஆம் திகதி 2019ஆம் ஆண்டு பெட்ரோலின் விலை 134 ரூபாவாக இருந்தது. இப்போது அது 360 ரூபாவாக பாரியளவில் உயர்ந்துள்ளது.
95 ரூபாவாக இருந்த சம்பா அரிசி ஒரு கிலோ கிராமின் விலை 240 ரூபாவாக அதிகரித்துள்ளது. 19 ரூபாவாக இருந்த ஒரு முட்டை இப்பொழுது 50 ரூபாவிற்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இந்த அதிகரித்த வாழ்க்கைச் செலவுக்கு மத்தியிலேயே எமது நாட்டு மக்கள் புத்தாண்டைக் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், தற்போது இருக்கும் இக்கட்டான நிலையில் இருந்து மீள்வதற்கு ஒரு அவசியமான மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.