ஈரானுக்கு பதிலடி கொடுக்க தேவையில்லை: இஸ்ரேல் முன்னாள் பிரதமர் பகிரங்கம்
இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதலை தடுத்து நிறுத்தி ஈரானை நாங்கள் தோற்கடித்து விட்டோம் என இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் எஹட் ஒல்மேர்ட் (Ehud Olmert) தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த சனிக்கிழமை (13) இஸ்ரேல் மீது ஈரான் அதிரடி தாக்குதலில் ஈடுபட்ட நிலையில் இந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டமையை அடுத்து இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கசில் உள்ள ஈரான் நாட்டின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த 1ஆம் திகதி அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில், ஈரானின் இஸ்லாமிய புரட்சி படையை சேர்ந்த 3 முக்கிய அதிகாரிகள் உயிரிழந்ததனால் ஆத்திரமடைந்த ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படும் என சூளுரைத்தது.
இஸ்ரேல் மீது ஈரான் அதிரடி தாக்குதல்
2 வாரங்களாக அந்த பகுதியில் பதற்ற நிலை நீடித்த நிலையில் இஸ்ரேல் மீது கடந்த சனிக்கிழமை (13) ஈரான் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டது.
இதன்போது நூற்றுக்கும் மேற்பட்ட நடுத்தர ரக பொலிஸ்டிக் வகை ஏவுகணைகளையும், 30க்கும் கூடுதலான தரைவழி தாக்குதல் நடத்த கூடிய ஏவுகணைகள் மற்றும் 150க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை கொண்டும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் எஹட் ஒல்மேர்ட் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்
“இஸ்ரேல் வான் பாதுகாப்பு பகுதியில் திறமையாக செயற்பட்டு, ஈரானின் தாக்குதலை, இஸ்ரேல் மற்றும் அதன் கூட்டணி அரசுகள் 99 சதவீதம் வழிமறித்து தடுத்து நிறுத்தியது. இது இஸ்ரேலுக்கு வெற்றியை பெற்று தந்துள்ளதுடன், ஈரானியர்களின் மதிப்பை இழக்கும்படியும் செய்துள்ளது.
ஈரானை தோற்கடித்த இஸ்ரேல்
ஈரானை நாங்கள் தோற்கடித்து விட்டோம், அவர்களை முட்டாள் என உணர செய்து விட்டோம் இஸ்ரேலுக்கு எதிராக ஆத்திரமூட்ட கூடிய வகையில் ஈரான் தாக்குதலை தொடங்கியது.
ஆனால், இஸ்ரேலின் வான் பாதுகாப்பு படையினர் திறமையாக செயற்பட்டு, ஆச்சரியம் ஏற்படுத்துகிற வகையில் வெற்றியை ஈட்டி தந்துள்ளனர். அதனால், இஸ்ரேல் அரசு பதிலடி கொடுக்க தேவையில்லை.
எனது எண்ணப்படி நாங்கள் வெற்றியடைந்து விட்டோம். இந்த சண்டையை நாங்கள் சுமந்து திரிய வேண்டியதில்லை. ஈரானியர்கள் எப்போதும் நம்ப தகுந்தவர்கள். நாங்கள் தாக்குதல் நடத்துவோம் என்று அவர்கள் அறிவித்தனர். அதேபோன்று செய்தனர்.
இந்த தாக்குதலை முடித்து விட்டோம் என அவர்கள் அறிவித்து உள்ளனர். இதனை தீவிர கவனத்தில் கொள்ள வேண்டும் என நான் நினைக்கிறேன். எனினும், எவரோ சிலர், ஏதோ ஒரு காரணத்திற்காக தாக்குதல் நடத்த முடிவு மேற்கொண்டால், அதனை எதிர்கொள்ள அனைத்து விடயங்களையும் இஸ்ரேல் தயாராக வைத்திருக்க வேண்டும்.
காசாவில் 34 ஆயிரம் பேர் மரணம்
இதேபோன்று, காசாவில் பல மாதங்களாக நீடித்து வரும் இந்த போரால், 34 ஆயிரம் பேர் வரை மரணம் அடைந்துள்ளனர். இதனை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இரு நாடு தீர்வு அடிப்படையில், நீண்ட அமைதி ஏற்படுத்த வேண்டும்.” என அவர் வலியுறுத்தினார்.
இதேவேளை இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த ஆண்டு ஒக்டோபரில் தாக்குதல் நடத்தியபோது, நெதன்யாகுவுக்கு (Benjamin Netanyahu) எதிராக ஒல்மேர்ட் தனது கண்டனங்களை வெளியிட்டார்.
நெதன்யாகுவின் ஆணவமே, இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்த காரணம் என அப்போது அவர் குற்றச்சாட்டாக கூறினார். காசா மீது நாம் படையெடுக்கவோ, ஆக்கிரமிப்பு செய்யவோ தேவையில்லை. இஸ்ரேல் மக்களை கொடூர முறையில் படுகொலை செய்த பயங்கரவாதிகளை கண்டறிந்து அவர்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று அப்போது அவர் கூறியமை குறிப்பிடத்தக்கது.