காணித்தகராறு முற்றி முதியவர் மீது தாக்குதல் – கை முறிந்ததில் வைத்திய சாலையில் அனுமதி
தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுவன் பகுதியில் அயலவர்களுக்கு இடையில் காணப்பட்ட நீண்டகால காணித்தகராறு முற்றியதில் ஒரு தரப்பினர் மறுதரப்பினர் மீது தாக்குதல் முற்றியதில் முதியவர் ஒருவர் தலையில் படுகாயமடைந்த நிலையிலும் கை முறிந்த நிலையிலும் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நீண்டகாலமாக காணப்பட்ட காணிக்கான பாதைத்தகராறு காரணமாக அயலவர்களுக்கு இடையில் பிணக்கு ஏற்பட்டதுடன், இது சம்பந்தமாக மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கடந்த 13ஆம் திகதியன்று மாலையில் ஒரு தரப்பினர் மறுதரப்பினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ஒருவர் தலையில் படுகாயமடைந்த நிலையிலும் கை முறிந்த நிலையிலும் தெல்லிப்பழை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆயினும் தெல்லிப்பழை பொலிசார் , தாக்குதலுக்கு உள்ளானவரிடம் வாக்குமூலம் பெற்று இன்னுமே சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தாமல் உள்ளதாக குற்றம் சாட்டியுள்ள பாதிக்கப்பட்ட தரப்பினர், தாக்குதலாளியை கைது செய்து உடன் விடுவித்துள்ளதாகவும், இருதரப்பினரையும் இணங்கிச்செல்லுமாறு வற்புறுத்தி வருவதுடன் பாதிக்கப்பட்ட தரப்பின் நலன்களை கவனத்தில் எடுக்காது தாக்குதல் நடாத்திய தரப்பினருக்கு சாதகமாக செயற்பட்டு வருவதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.