;
Athirady Tamil News

சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்ட ஆங் சான் சூகி

0

27 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஆங் சான் சூகி (Aung San Suu Kyi) வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தென்கிழக்கு ஆசிய நாடான மியன்மாரில் இராணுவ ஆட்சியை எதிர்த்து பல போராட்டங்களை நடத்தியவர் 78 வயதான ஆங் சான் சூகி.

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இவர் கடந்த 2020ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மீண்டும் இராணுவ ஆட்சி
ஆனால் தேர்தலில் மோசடி செய்ததாக கூறி அடுத்த ஆண்டே இவரது பதவி பறிக்கப்பட்டது. இதனால் அங்கு மீண்டும் இராணுவ ஆட்சி கொண்டு வரப்பட்டது.

மேலும் இரண்டரை ஆண்டுகளுக்கு அங்கு அவசர நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கிடையே ஆங் சான் சூகி உட்பட 100இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து ஆங் சான் சூகி மீது இராணுவத்துக்கு எதிரான கிளர்ச்சி, ஊழல் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

27 ஆண்டுகள் சிறைத் தண்டனை
இது தொடர்பாக பல வழக்குகள் அந்த நாட்டின் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இவற்றுள் சில வழக்குகளில் அவருக்கு இதுவரை 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், ஆங் சான் சூகி சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மியன்மார் இராணுவம் தெரிவித்துள்ளது.

வெப்ப அலை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சிறையிலிருந்து மாற்றப்பட்ட ஆங் சான் சூகி தற்போது எங்கு இருக்கிறார் என்பது குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.