இளையராஜாவே அனைவருக்கும் மேலானவர்! வாதத்தை ஏற்க மறுத்த நீதிமன்றம்
பாடல் காப்புரிமை தொடர்பான வழக்கில், அனைவருக்கும் மேலானவர் தான் இந்த இளையராஜா என்று சென்னை மேல் நீதிமன்றத்தில் இளையராஜா தரப்பு சட்டத்தரணி; வாதம் ஒன்றை முன்வைத்தார் எனினும் இந்த வாதத்தை ஏற்க மேல் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இளையராஜா திகழ்கிறார்.
இந்தநிலையில் இளையராஜா இசையமைத்த 4 ஆயிரத்து 500 பாடல்களை, எக்கோ மற்றும் அகி உள்ளிட்ட இசை நிறுவனங்கள் ஒப்பந்த காலம் முடிந்த பிறகும் காப்புரிமை பெறாமல் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
மேன்முறையீடு செய்த இளையராஜா
இதற்கு எதிராக சென்னை மேல் நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கை தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தயாரிப்பாளர்களிடம் உரிமையை பெற்று இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கும் உரிமை உள்ளது என உத்தரவிட்டது.
இதனையடுத்து மேல் நீதிமன்றத்தன் இந்த உத்தரவை எதிர்த்து இளையராஜா மேன்முறையீடு செய்தார்.
இந்தநிலையில் இரண்டு நீதிபதிகள் அமர்வில் இந்த மேல்முறையீடு விசாரிக்கப்பட்டு, பாடல்களைப் பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
எனினும் தயாரிப்பாளரிடம் உரிமையை பெற்றுள்ளதால் பாடல்களை பயன்படுத்த உரிமை உள்ளதாக கூறி எக்கோ நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கு கடந்த 10ம் திகதி மேல் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது.
இதன்போது இசை நிறுவனம் தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி, ‛திரைப்படத்துக்காக தயாரிப்பாளரிடம் ஊதியம் பெறும் இசையமைப்பாளர், ரோயலிட்டி என்ற அறிவுசார் சொத்துரிமையை தவிர மற்ற அனைத்து உரிமைகளையும் இழந்துவிடுகிறார்.
இளையராஜா மேலானவர்
எனவே இந்த விடயத்தில் இளையராஜாவுக்கு உரிமை இருக்கிறதா? இல்லையா? என்பதை இறுதி விசாரணையில் தான் முடிவு செய்ய முடியும் என்ற வாதத்தை முன்வைத்தார்.
இளையராஜா தான் தான் அனைவருக்கும் மேலானவர் என நினைக்கிறார் என்றும் சட்டத்தரணி இதன்போது தெரிவித்தார்.
இதன்போது குறுக்கிட்ட இளையராஜாவின் சட்டத்தரணி, ‛‛ஆம் இளையராஜா அனைவருக்கும் மேலானவர் தான்’ எனக்கூறினார். வீம்புக்காக இதனை சொல்வதாக நினைக்க வேண்டாம்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தநிலையில் நேற்றுமுன் தினம் குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மேல் நீதிமன்ற நீதிபதி மகாதேவன், ‛‛இசை மூர்த்திகளான முத்துஸ்வாமி தீக்சீதர், தியாகராஜர் மற்றும் சியாமா சாஸ்திரிகள்” ஆகியோர் எல்லோருக்கம் மேலானவர்கள் என்று கூறலாம். ஆனால், இளையராஜாவை அப்படி கூறுவதை ஏற்கமுடியாது என்று குறிப்பிட்டார்.
எனினும் இளையராஜா தரப்பு சட்டத்தரணி, ‛‛எல்லோருக்கும் மேலானவன் எனக்கூறியது, பாடல்கள் மீதான காப்புரிமை விவகாரத்தில் மட்டுமே. மற்றபடி இளையராஜா, தன்னை அப்படி கூறிக்கொண்டது இல்லை என்பது உங்களுக்கே தெரியும்’ என்று நீதிபதியிடம் தெரிவித்தார்.
இதனையடுத்து நீதிமன்றம் விசாரணையை எதிர்வரும் 24ம் திகதிக்கு ஒத்திவைத்தது.