பரவும் மர்ம காய்ச்சல்… உஷார் நிலையில் மருத்துவர்கள்: மிக ஆபத்தான கட்டத்தில் பலர்
கோவிட் பெருந்தொற்றின் தொடக்க நாட்கள் போல, பரவும் மர்ம காய்ச்சலால் டசின் கணக்கான மக்கள் அர்ஜென்டினாவில் மருத்துவமனைகளை நாடுவதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
சுகாதார கண்காணிப்பு அமைப்பு
தொற்றுநோய் ஒன்று பரவுவதாக சர்வதேச சுகாதார கண்காணிப்பு அமைப்பு ஒன்றில் இருந்து தகவல் வெளியான நிலையில், அர்ஜென்டினா தலைநகர் Buenos Aires-ல் சுமார் 60 பேர்கள் மர்ம காய்ச்சலுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
2019ல் கோவிட் பரவுவதையும் இதே சர்வதேச அமைப்பு தான் முதலில் எச்சரித்துள்ளது. தற்போது இதே அமைப்பு தான் அர்ஜென்டினா அதிகாரிகளையும் எச்சரித்துள்ளது. கடந்த 30 நாட்களில் தீவிர நிமோனியா பாதிப்புடன் Buenos Aires பகுதியில் பலர் தீவிர மருத்துவ சிகிச்சையை நாடியுள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள் என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. ஆனால் அர்ஜென்டினா அதிகாரிகள் தரப்பில் இருந்து இதுவரை உத்தியோகப்பூர்வ அறிக்கைகள் எதுவும் வெளியாகவில்லை.
தலைவலி மற்றும் இருமல்
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் பலரும் மூச்சுவிட சிரமப்படுவதாகவும் கூறப்படுகிறது. பலருக்கும் பறவைக் காய்ச்சல் பாதிப்பு அறிகுறிகள் காணப்படுவதாகவும், ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் பறவைகளுடன் தொடர்பில்லாதவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடக்க அறிகுறியாக லேசான தலைவலி மற்றும் இருமல் காணப்படும் என்றும், இது தீவிர நிமோனியா பாதிப்புக்கு காரணமாக அமையும் என்றும் கூறப்படுகிறது. வயதானவர்கள் அல்லது நோயெதிர்ப்பு சக்தி குறைவானவர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே மருத்துவர்களுக்கு தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.