ஒற்றைத் தாக்குதல்… ஈரானுக்கு பொறி வைத்த இஸ்ரேல்: திரண்ட மக்களால் ஸ்தம்பித்த தலைநகரம்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியபடி, ஈரானுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி பேரணி முன்னெடுத்துள்ளனர்.
இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல்
ஈரான் தலைநகரில் ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் வந்து இஸ்ரேல் மீதான தாக்குதலைக் கொண்டாடினர். ஈரான் மீது இஸ்ரேல் ட்ரோன் தாக்குதலை முன்னெடுத்த நிலையிலேயே மக்கள் வீதிக்கு வந்து பேரணியில் கலந்துகொண்டுள்ளனர்.
இதனிடையே, இஸ்ரேலின் பல எண்ணிக்கையிலான ட்ரோன் விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த வார இறுதியில் ஈரான் முன்னெடுத்த தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில் இஸ்ரேல் ட்ரோன் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்றே அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 ஏவுகணை வீசப்பட்டதாகவும், இது ஈரானுக்கான எச்சரிக்கை மட்டுமே என்றும் அமெரிக்க அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. ஆனால் ஈரானின் கழுத்தில் தற்போது இஸ்ரேல் கை வைத்துள்ளதாகவும், அடுத்த நடவடிக்கை ஈரான் முன்னெடுக்கும் வாய்ப்புகள் அதிகம் என்றே நிபுணர்கள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
விமானங்களுக்கு தடை
இஸ்ரேல் ஆழம் பார்க்கும் பொருட்டு ஒற்றைத் தாக்குதலை முன்னெடுத்துள்ளது என்றும், ஈரானுக்கு வைத்திருக்கும் பொறி இதுவென்றும், ஈரான் பதிலளித்தால், இஸ்ரேல் முழு அளவிலான தாக்குதலை தொடுக்கும் என்றும் கூறுகின்றனர்.
ஆனால் இஸ்ரேல் தொடர்பில் எந்த கருத்தையும் தெரிவிக்க மறுத்துள்ள ஈரான், தாக்குதல் குறித்தும் கருத்து தெரிவிக்கவில்லை. ஈரான் ஜனாதிபதியும் இந்த விவகாரம் தொடர்பில் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
இதனிடையே, ஈரான் வான் பரப்பில் விமானங்களுக்கு தடை விதித்தனர். ஆனால் மிக விரைவிலேயே திட்டமிட்டபடி விமானங்கள் பறக்கத் தொடங்கின. இஸ்ரேல் மீது ஈரான் தனது முதல் நேரடி பதிலடித் தாக்குதலை நடத்திய கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு இந்த ஒற்றைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.