சோகமாக இருந்தால் 10 நாள் விடுமுறை; நிறுவன அறிவிப்பால் ஊழியர்கள் மகிழ்ச்சி
சீனாவைச் சேர்ந்த Fat Dong Lai தங்களது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் சோகமாக இருக்கும் நாள்களில் வருடத்தில் 10 நாட்கள் வரை கூடுதலாக விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளமை அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Fat Dong Lai நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒரு நாளைக்கு ஏழு மணிநேரம் வேலை . ஊழியர்க்ளுக்கு 30 முதல் 40 நாள்கள் வரை வருடாந்திர விடுப்பு வழங்கப்படுகிறது.
மகிழ்ச்சியாக இல்லாவிட்டால் வேலைக்கு வர வேண்டாம்
அதேவேளை சீன புத்தாண்டு காலத்தில் இந்நிறுவனம் ஐந்து நாள்களுக்கு மேல் மூடப்படுவதால் அப்போதும் ஊழியர்களுக்கு விடுமுறை தான். நிறுவனத்தின் ஊழியர்களின் சராசரி மாதச் சம்பளம் 7,000 யுவான்ஆகும்.
இந்த நிலையில் “எல்லோருக்கும் அவர்கள் மகிழ்ச்சியாக இல்லாத நாட்கள் உள்ளன, எனவே நீங்கள் மகிழ்ச்சியாக இல்லாவிட்டால், வேலைக்கு வர வேண்டாம். இந்த மாற்றத்தின் மூலம், ஊழியர்கள் தங்களுடைய ஓய்வு நேரத்தை தீர்மானிக்க சுதந்திரமாக இருப்பார்கள்.
இந்த விடுப்பை நிர்வாகத்தால் மறுக்க முடியாது” என Fat Dong Lai நிறுவனர் யூ டோங் லாய் கூறியுள்ளார்.
அதேவேளை 2021 ஆம் ஆண்டு சீனாவில் பணியிட கவலை குறித்த கணக்கெடுப்பின்படி, 65 சதவீதத்திற்கும் அதிகமான ஊழியர்கள் வேலையில் சோர்வாகவும் மகிழ்ச்சியற்றவர்களாகவும் உணர்கிறார்கள் என புள்ளிவிபரங்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.