கொழும்பில் பகடைக்காய் விளையாட்டின் போது ஏற்பட்ட அசம்பாவிதம்… பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர்!
கொழும்பு – கொட்டாவை ருக்மலே பகுதியில் சிலர் பந்தயம் கட்டி பகடைக்காய் விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது அப்பகுதியை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.
இதன்போது, பொலிஸாரிடம் இருந்த தப்பிக்க ஓடிய நபரொருவர் தண்ணீர் நிரம்பிய குவாரியில் விழுந்து உயிரிழந்ததாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்று முன்தினம் இரவு (18) இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் ஹோமாகம நகரின் சீமா மாவத்தை பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த தரப்பினர் பணத்திற்காக பகடைக்காய் ஆடிக்கொண்டிருந்தபோது, திடீரென அந்த இடத்திற்கு பொலிஸார் வந்தபோது, உயிரிழந்த நபருடன் மேலும் 3 பேர் ஓடி, தண்ணீர் நிரம்பிய குவாரிக்குள், சுமார் முப்பது அடி உயரத்தில் இருந்து குதித்துள்ளனர்.
அவர்களில் மூவர் குவாரியில் இருந்து நீந்தி வீட்டுக்குச் சென்றதாகவும், ஒருவர் வீட்டுக்குச் செல்லவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகத்தின் பேரில் அப்பகுதி மக்கள் குவாரியில் உள்ள தண்ணீரை பம்ப் மூலம் அகற்றிய போது, குவாரியின் அடியில் சிக்கி இறந்தவரின் சடலத்தை பார்த்து பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த நுகேகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குற்றத்தடுப்பு விசாரணை அதிகாரிகள் ஆரம்ப கட்ட விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
ஹோமாகம தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.