எலான் மஸ்கின் இந்திய பயணம் ரத்து
தொழில்நுட்ப உலகின் முன்னோடியான எலான் மஸ்க்கின் இந்திய பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் எதிர்பார்க்கப்பட்ட எலான் மஸ்கின் பயணம் “டெஸ்லா நிறுவன கடமைகளின் காரணமாக” தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று அவரே தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் இறுதியில் மேற்கொள்ள திட்டமிடப்பட்ட இந்த பயணத்தில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதும், டெஸ்லா நிறுவனம் இந்திய சந்தையில் கால் பதிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதும் திட்டமிடப்பட்டு இருந்தது.
இந்திய வாடிக்கையாளர்கள்
முன்னதாக இந்தப் பயணம் குறித்து ஆர்வம் காட்டியிருந்த மஸ்க், பிரதமர் மோடியை சந்திப்பதற்கான தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்தார். இதன் மூலம், டெஸ்லா நிறுவனத்தின் இந்திய திட்டங்கள் குறித்த ஊகங்கள் அனைவர் மத்தியிலும் பரவி வந்தது.
உலகின் மூன்றாவது பெரிய கார் சந்தையைக் கொண்டுள்ள இந்தியா, பல மின்சார வாகன நிறுவனங்களின் இலக்கு சந்தையாக இருந்து வருகிறது. எனவே டெஸ்லா நிறுவனத்தின் வருகை, இந்திய வாடிக்கையாளர்கள் மற்றும் தொழில் துறை நிபுணர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், டெஸ்லா நிறுவனத்தின் நிறுவுனர் எலான் மஸ்கின் பயணம் “டெஸ்லா நிறுவன கடமைகளின் காரணமாக” தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என அவரே தன்னுடைய சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.
தற்காலிக தாமதம்
இது தற்காலிக தாமதம் மட்டுமே என்று மஸ்க் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், இந்த ஆண்டு இறுதியில் (2024) இந்தியா வரவுள்ளதாக தனது தொடர்ச்சியான ஆர்வத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இதன் மூலம், டெஸ்லா நிறுவனத்தின் இந்திய வருகை குறித்த பேச்சுவார்த்தைகள் மறுசீரமைக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.