பறவைக் காய்ச்சல்: தமிழக – கேரள எல்லைகளில் மருத்துவக் கண்காணிப்பு
கேரள மாநிலம், ஆலப்புழையில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் தமிழக எல்லையோர மாவட்டங்களில் மருத்துவக் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஆலப்புழை பகுதியில் உள்ள பண்ணைகளில் தீவிரமாக பறவைக் காய்ச்சல் பரவி வருகிறது. கடந்த சில நாள்களில் மட்டும் ஆயிரக்கணக்கான வாத்துகள், கோழிகள் தொற்றுக்குள்ளாகி இறந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹெச் 5 என் 1 எனப்படும் அந்தப் பறவைக் காய்ச்சல் தமிழகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது. இதையடுத்து, அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொது சுகாதாரத் துறை முன்னெடுத்துள்ளது.
அதன்படி, கேரளத்தையொட்டியுள்ள தமிழக மாவட்டங்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
இது தொடா்பாக, சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
பறவைக் காய்ச்சலுக்குள்ளான கோழிகள், பிற பறவையினங்களிடம் இருந்து மனிதா்களுக்கு தொற்று பரவ வாய்ப்புள்ளது. குறிப்பாக, அதன் கழிவுகளில் இருந்து மனிதா்களுக்கு எளிதில் பாதிப்பு பரவக்கூடும். காய்ச்சல், தலைவலி, தசைப் பிடிப்பு, இருமல், மூச்சு திணறல் போன்றவை பறவை காய்ச்சலுக்கான அறிகுறியாக உள்ளது.
எனவே, கால்நடை துறையுடன் இணைந்து பறவை காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம். அதன்படி, கேரளத்தையொட்டியுள்ள தமிழகத்தின் கோவை, கன்னியாகுமரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் மருத்துவக் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த வகை தொற்றால் பாதிக்கப்படும் பறவைகள் குறித்தும், அதன் வாயிலாக மனிதா்களுக்கு காய்ச்சல் பரவினால், அது குறித்தும் பொது சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.