இலங்கையில் கல்வி ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க விருப்பம் வெளியிட்டுள்ள கனடா
இலங்கையின் கல்வி ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க கனடா விருப்பம் கொண்டுள்ளதாக பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவிற்கும் கனடாவின் வான்கூவரிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழக அதிகாரிகளுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
கல்வித்துறை
இலங்கையில் கல்வித்துறையில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு தகவல் மற்றும் பயிற்சி அளிப்பதற்காக கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பங்களிப்பைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இதன்போது ஆராயப்பட்டுள்ளது.
இதன் கீழ், இலங்கையில் உள்ள 19 தேசிய கல்வியியல் கல்லூரிகளின் கல்வியாளர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் அதிபர்கள், இலங்கை கல்விப் பல்கலைக்கழகத்தின் கல்வி நிர்வாகிகள் மற்றும் ஆசிரிய உறுப்பினர்களைப் பயிற்றுவிப்பதற்கு கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ஆதரவைப் பெறுவதற்கான இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.
எதிர்காலத்தில் இலங்கை மற்றும் கனடாவின் கல்லூரிகளை இணைத்து நிறுவுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பதில் தலைவர் பேராசிரியர் கேஜ் அவெரில், சர்வதேச மற்றும் ஆளுநர்கள் சபையின் உறுப்பினர் பேராசிரியர் அன்னா கிண்ட்லர் மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளர் கலாநிதி ஃபாங் வாங் ஆகியோர் கலந்துகொண்டனர்.