இலங்கையில் நிறைவேற்று அதிகார அதிபர் முறைமையை நீக்குதல்! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
இலங்கையின் எதிர்வரும் அதிபர் தேர்தலில் நிறைவேற்று அதிகார அதிபர் முறைமையை நீக்குவது தொடர்பாக அரசியல் கட்சிகள் மற்றும் கூட்டணிகளின் நிலைப்பாட்டை தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறவேண்டும் என சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய (Karu Jayasuriya) தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகார அதிபர் முறைமை நீக்கம் தொடர்பில் மீண்டும் கருத்து வெளியிட்டுள்ள அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாட்டில் நீண்ட காலமாகவே நிறைவேற்று அதிகார அதிபர் முறைமை நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அனைத்தின சமூகங்களினதும் கருத்துகள்
அதுதொடர்பில் பதவிக்கு வருவதற்கு முன்னதாக அனைத்து வேட்பாளார்களும் வாக்குறுதிகளை அளிக்கின்றபோதும் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் அவர்கள் அம்முறையை நீக்குவது தொடர்பில் கரிசனைகளை வெளிப்படுத்துவதில்லை. இவ்வாறான நிலையில் இந்த ஆண்டில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.
நாம் நாடாளவிய ரீதியில் உள்ள சமூகக் குழுக்களுடன் உரையாடல்களைச் செய்து வருகின்றதன் அடிப்படையில் அனைத்தின சமூகங்களும் நிறைவேற்று அதிகார அதிபர் முறைமை நீக்கப்பட வேண்டும் என்ற கருத்துக்களை கொண்டிருப்பது புலப்படுகின்றது.
அதிபர் தேர்தல்
அந்தவகையில், எதிர்வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடுபவர்கள், மக்களின் ஆணையைப் பெறுவதற்கு முன்னதாக தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் நிறைவேற்று அதிகார அதிபர் முறைமை நீக்கம், அதற்கான கால வரையறை உள்ளிட்ட விடயங்களை வெளியிட வேண்டும்.
அதன் மூலமாக மக்கள் ஆணைபெற்று வருபவர்கள் நிறைவேற்று அதிகார அதிபர் முறைமைய நீக்குவதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
நாம் சிவில் அமைப்பாக இருப்பதன் காரணமாக, அவ்விதமான நடவடிக்கைகள் முனெடுக்கப்படுகின்றபோது, அதற்கு ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு தயாராகவே உள்ளோம்“ என தெரிவித்தார்.