வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி – தேசிய நிகழ்ச்சி திட்டத்தை யாழ் மாவட்டத்தில் ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ்!
நாடளாவிய ரீதியில் குறைந்த வருமானங் கொண்ட குடும்பங்களுக்கு தலா 10 கிலோ கிராம் அரிசி வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தை இன்று யாழ் மாவட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தார்.
குறித்த அரிசி வழங்கும் தேசிய நிகழ்வு யாழ் மாவட்டத்தில் மருதங்கேணி பிரதேச செயலகத்தில் அமைச்சரால் இன்று காலை 9.30 மணியளவில் மாவட்ட பதில் அரச அதிபர் பிரதீபனின் தலைமையில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
முன்பதாக 2023 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் 25 மாவட்டங்களில் சமுர்த்தி பயனாளிகள் உள்ளிட்ட 2.74 மில்லியன் குடும்பங்களை உள்ளடக்கியதாக, ஒரு குடும்பத்திற்காக 10 கிலோக்கிராம் நாட்டரிசியை இரண்டு மாதங்களுக்கு வழங்குவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டுருந்தது.
அதன் தொடர்ச்சிதாக அடையாளங் காணப்பட்ட குறைந்த வருமானங் கொண்டவர்களின் போசாக்கு மட்டத்தைப் பேணுவதற்கு ஏதுவாக இவ்வாண்டிலும் குறித்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டது.
அதற்கிணங்க, சிறிய மற்றும் நடுத்தரளவிலான நெல் ஆலை உரிமையாளர்களை இணைத்து மாவட்டச் செயலாளர்கள் மூலமாக அடையாளங் காணப்பட்டுள்ள குறைந்த வருமானங் கொண்ட 2.74 மில்லியன் குடும்பங்களுக்கு தலா 10 கிலோக்கிராம் அரிசி வழங்கும் வேலைத்திட்டத்தை இரண்டு மாதங்களுக்கு நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.
இதனடிப்படையிலேயே இன்றையதினம் யாழ் மாவட்டத்தில் சம்பிரதாயபூர்வமாக அமைச்சரால் குறித்த அரிசி வழங்கும் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.